உவகைக் கலுழ்ச்சி

277
'மீன் உண் கொக்கின் தூவி அன்ன
வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறு எறிந்து பட்டனன்' என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே; கண்ணீர்
5
நோன் கழை துயல்வரும் வெதிரத்து
வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே.

திணை அது; துறை உவகைக் கலுழ்ச்சி.
பூங்கண் உத்திரையார் பாடியது.

278
'நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென் தோள்,
முளரி மருங்கின், முதியோள் சிறுவன்
படை அழிந்து, மாறினன்' என்று பலர் கூற,
'மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்ட என்
5
முலை அறுத்திடுவென், யான்' எனச் சினைஇ,
கொண்ட வாளொடு படு பிணம் பெயரா,
செங்களம் துழவுவோள், சிதைந்து வேறு ஆகிய
படு மகன் கிடக்கை காணூஉ,
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே!

திணையும் துறையும் அவை.
காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியது.

295
கடல் கிளர்ந்தன்ன கட்டூர் நாப்பண்,
வெந்து வாய் மடித்து வேல் தலைப் பெயரி,
தோடு உகைத்து எழுதரூஉ, துரந்து எறி ஞாட்பின்,
வரு படை போழ்ந்து வாய்ப் பட விலங்கி,
5
இடைப் படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய,
சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி,
வாடு முலை ஊறிச் சுரந்தன
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே.

திணை அது; துறை உவகைக் கலுழ்ச்சி.
ஒளவையார் பாடியது.