கொற்றவள்ளை

4
வாள், வலம் தர, மறுப் பட்டன
செவ் வானத்து வனப்புப் போன்றன;
தாள், களம் கொள, கழல் பறைந்தன
கொல்ல் ஏற்றின் மருப்புப் போன்றன;
5
தோல், துவைத்து அம்பின் துளை தோன்றுவ,
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன;
மாவே, எறி பதத்தான் இடம் காட்ட,
கறுழ் பொருத செவ் வாயான்,
எருத்து வவ்விய புலி போன்றன;
10
களிறு, கதவு எறியா, சிவந்து, உராஅய்,
நுதி மழுங்கிய வெண் கோட்டான்,
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;
நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி,
15
மாக் கடல் நிவந்து எழுதரும்
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ
அனையை ஆகன்மாறே,
தாய் இல் தூவாக் குழவி போல,
ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே.

திணை வஞ்சி; துறை கொற்றவள்ளை.
சோழன் உருவப் பல் தேர் இளஞ் சேட்சென்னியைப் பரணர் பாடியது.

7
களிறு கடைஇய தாள்,
கழல் உரீஇய திருந்து அடி,
கணை பொருது கவி வண் கையால்,
கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து,
5
மா மறுத்த மலர் மார்பின்,
தோல் பெயரிய எறுழ் முன்பின்,
எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர்
ஊர் சுடு விளக்கத்து அழு விளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை; ஆகலின், நல்ல
10
இல்ல ஆகுபவால் இயல் தேர் வளவ!
தண் புனல் பரந்த பூசல் மண் மறுத்து
மீனின் செறுக்கும் யாணர்ப்
பயன் திகழ் வைப்பின் பிறர் அகன் தலை நாடே.

திணை வஞ்சி; துறை கொற்றவள்ளை; மழபுல வஞ்சியும் ஆம்.
சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது.

41
காலனும் காலம் பார்க்கும்; பாராது,
வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய,
வேண்டு இடத்து அடூஉம் வெல் போர் வேந்தே!
திசை இரு நான்கும் உற்கம் உற்கவும்,
5
பெரு மரத்து, இலை இல் நெடுங் கோடு வற்றல் பற்றவும்,
வெங் கதிர்க் கனலி துற்றவும், பிறவும்,
அஞ்சுவரத் தகுந புள்ளுக் குரல் இயம்பவும்,
எயிறு நிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும்,
களிறு மேல் கொள்ளவும், காழகம் நீப்பவும்,
10
வெள்ளி நோன் படை கட்டிலொடு கவிழவும்,
கனவின் அரியன காணா, நனவில்
செருச் செய் முன்ப! நின் வரு திறன் நோக்கி,
மையல் கொண்ட ஏமம் இல் இருக்கையர்,
புதல்வர் பூங் கண் முத்தி, மனையோட்கு
15
எவ்வம் கரக்கும் பைதல் மாக்களொடு
பெருங் கலக்குற்றன்றால் தானே காற்றோடு
எரி நிகழ்ந்தன்ன செலவின்
செரு மிகு வளவ! நின் சினைஇயோர் நாடே.

திணை வஞ்சி; துறை கொற்றவள்ளை.
அவனைக் கோவூர் கிழார் பாடியது.

98
முனைத் தெவ்வர் முரண் அவியப்
பொரக் குறுகிய நுதி மருப்பின் நின்
இனக் களிறு செலக் கண்டவர்
மதில் கதவம் எழுச் செல்லவும்,
5
பிணன் அழுங்கக் களன் உழக்கிச்
செலவு அசைஇய மறுக் குளம்பின் நின்
இன நல் மாச் செலக் கண்டவர்
கவை முள்ளின் புழை அடைப்பவும்,
மார்புறச் சேர்ந்து ஒல்காத்
10
தோல் செறிப்பு இல் நின் வேல் கண்டவர்
தோல் கழியொடு பிடி செறிப்பவும்,
வாள் வாய்த்த வடுப் பரந்த நின்
மற மைந்தர் மைந்து கண்டவர்
புண் படு குருதி அம்பு ஒடுக்கவும்,
15
நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென,
உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும்
கூற்றத்து அனையை; ஆகலின், போற்றார்
இரங்க விளிவதுகொல்லோ வரம்பு அணைந்து
இறங்குகதிர் அலம்வரு கழனி,
20
பெரும் புனல் படப்பை, அவர் அகன் தலை நாடே!

திணை வாகை; துறை அரச வாகை; திணை வஞ்சியும், துறை கொற்ற வள்ளையும் ஆம்.
அவனை அவர் பாடியது.

100
கையது வேலே; காலன புனை கழல்;
மெய்யது வியரே; மிடற்றது பசும் புண்;
வட்கர் போகிய வளர் இளம் போந்தை
உச்சிக் கொண்ட ஊசி வெண் தோட்டு,
5
வெட்சி மா மலர், வேங்கையொடு விரைஇ,
சுரி இரும் பித்தை பொலியச் சூடி,
வரிவயம் பொருத வயக் களிறு போல,
இன்னும் மாறாது சினனே; அன்னோ!
உய்ந்தனர் அல்லர், இவன் உடற்றியோரே;
10
செறுவர் நோக்கிய கண், தன்
சிறுவனை நோக்கியும், சிவப்பு ஆனாவே.

திணையும் துறையும் அவை; திணை வஞ்சியும், துறை கொற்றவள்ளையும் ஆம்.
அதியமான் தவமகன் பிறந்தவனைக் கண்டானை அவர் பாடியது.