செவியறிவுறூஉ

2
மண் திணிந்த நிலனும்,
நிலன் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்,
வளித் தலைஇய தீயும்,
5
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம் பெரும் பூதத்து இயற்கை போல
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்,
வலியும், தெறலும், அளியும், உடையோய்!
நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
10
வெண் தலைப் புணரிக் குட கடல் குளிக்கும்,
யாணர் வைப்பின், நல் நாட்டுப் பொருந!
வான வரம்பனை! நீயோ, பெரும!
அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ,
நிலம் தலைக்கொண்ட பொலம் பூந் தும்பை
15
ஈர் ஐம்பதின்மரும் பொருது, களத்து ஒழிய,
பெருஞ் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய்!
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,
நாஅல் வேத நெறி திரியினும்,
திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி,
20
நடுக்கின்றி நிலியரோ அத்தை அடுக்கத்து,
சிறு தலை நவ்விப் பெருங் கண் மாப் பிணை,
அந்தி அந்தணர் அருங் கடன் இறுக்கும்
முத் தீ விளக்கின், துஞ்சும்
பொற் கோட்டு இமயமும், பொதியமும், போன்றே!

திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
சேரமான் பெருஞ் சோற்று உதியஞ் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர்பாடியது.

3
உவவு மதி உருவின் ஓங்கல் வெண் குடை
நிலவுக் கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற,
ஏம முரசம் இழுமென முழங்க,
நேமி உய்த்த நேஎ நெஞ்சின்,
5
தவிரா ஈகை, கவுரியர் மருக!
செயிர் தீர் கற்பின் சேயிழை கணவ!
பொன் ஓடைப் புகர் அணி நுதல்,
துன் அருந் திறல், கமழ் கடாஅத்து,
எயிறு படையாக எயிற் கதவு இடாஅ,
10
கயிறு பிணிக்கொண்ட கவிழ் மணி மருங்கின்,
பெருங் கை, யானை இரும் பிடர்த் தலை இருந்து,
மருந்து இல் கூற்றத்து அருந் தொழில் சாயாக்
கருங் கை ஒள் வாட் பெரும்பெயர் வழுதி!
நிலம் பெயரினும், நின் சொல் பெயரல்;
15
பொலங் கழற் கால், புலர் சாந்தின்
விலங்கு அகன்ற வியல் மார்ப!
ஊர் இல்ல, உயவு அரிய,
நீர் இல்ல, நீள் இடைய,
பார்வல் இருக்கை, கவி கண் நோக்கின்,
20
செந் தொடை பிழையா வன்கண் ஆடவர்
அம்பு விட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை,
திருந்து சிறை வளை வாய்ப் பருந்து இருந்து உயவும்
உன்ன மரத்த துன் அருங் கவலை,
நின் நசை வேட்கையின் இரவலர் வருவர் அது
25
முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர்
இன்மை தீர்த்தல் வன்மையானே.

திணையும் துறையும் அவை.
பாண்டியன் கருங் கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதியை இரும்பிடர்த்தலையார்பாடியது.

5
எருமை அன்ன கருங் கல் இடை தோறு,
ஆனின் பரக்கும் யானைய, முன்பின்,
கானக நாடனை! நீயோ, பெரும!
நீ ஓர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்:
5
அருளும் அன்பும் நீக்கி, நீங்கா
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது, காவல்,
குழவி கொள்பவரின், ஓம்புமதி!
அளிதோ தானே; அது பெறல் அருங் குரைத்தே.

திணை பாடாண்திணை; துறை செவியறிவுறூஉ; பொருண்மொழிக் காஞ்சியும் ஆம்.
சேரமான் கருவூர் ஏறிய ஒள் வாட் கோப் பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட ஞான்று, நின் உடம்பு பெறுவாயாக!' என, அவனைச் சென்று கண்டு, தம் உடம்பு பெற்று நின்ற நரிவெரூஉத்தலையார் பாடியது.

6
வடாஅது பனி படு நெடு வரை வடக்கும்,
தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும்,
குணாஅது கரை பொரு தொடு கடற் குணக்கும்,
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும்,
5
கீழது முப் புணர் அடுக்கிய முறை முதற் கட்டின்
நீர் நிலை நிவப்பின் கீழும், மேலது
ஆனிலை உலகத்தானும், ஆனாது,
உருவும் புகழும் ஆகி, விரி சீர்த்
தெரி கோல் ஞமன் போல, ஒரு திறம்
10
பற்றல் இலியரோ! நின் திறம் சிறக்க!
செய் வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்து,
கடல் படை குளிப்ப மண்டி, அடர் புகர்ச்
சிறு கண் யானை செவ்விதின் ஏவி,
பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்து,
15
அவ் எயில் கொண்ட செய்வுறு நன் கலம்
பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கி,
பணியியர் அத்தை, நின் குடையே முனிவர்
முக் கட் செல்வர் நகர் வலம் செயற்கே!
இறைஞ்சுக, பெரும! நின் சென்னி சிறந்த
20
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே!
வாடுக, இறைவ! நின் கண்ணி ஒன்னார்
நாடு சுடு கமழ் புகை எறித்தலானே!
செலியர் அத்தை, நின் வெகுளி வால் இழை
மங்கையர் துனித்த வாள் முகத்து எதிரே!
25
ஆங்க, வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய
தண்டா ஈகைத் தகை மாண் குடுமி!
தண் கதிர் மதியம் போலவும், தெறு சுடர்
ஒண் கதிர் ஞாயிறு போலவும்,
மன்னிய, பெரும! நீ நிலமிசையானே!

திணையும் துறையும் அவை; துறை வாழ்த்தியலும் ஆம்.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரி கிழார் பாடியது.

35
நளி இரு முந்நீர் ஏணி ஆக,
வளி இடை வழங்கா வானம் சூடிய
மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர்,
முரசு முழங்கு தானை மூவருள்ளும்,
5
அரசு எனப்படுவது நினதே, பெரும!
அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்,
இலங்குகதிர் வெள்ளி தென் புலம் படரினும்,
அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட,
தோடு கொள் வேலின் தோற்றம் போல,
10
ஆடு கண் கரும்பின் வெண் பூ நுடங்கும்
நாடு எனப்படுவது நினதே அத்தை; ஆங்க
நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தே!
நினவ கூறுவல்; எனவ கேண்மதி!
அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து
15
முறை வேண்டு பொழுதில் பதன் எளியோர் ஈண்டு
உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோரே;
ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ
மாக விசும்பின் நடுவு நின்றாங்கு,
கண் பொர விளங்கு நின் விண் பொரு வியன்குடை
20
வெயில் மறைக் கொண்டன்றோ? அன்றே; வருந்திய
குடி மறைப்பதுவே; கூர்வேல் வளவ!
வெளிற்றுப் பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்ப,
களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை,
வருபடை தாங்கி, பெயர் புறத்து ஆர்த்து,
25
பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை
ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே;
மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும்,
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்,
காவலர்ப் பழிக்கும், இக் கண் அகல் ஞாலம்;
30
அது நற்கு அறிந்தனைஆயின், நீயும்
நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது,
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி,
குடி புறந்தருகுவை ஆயின், நின்
அடி புறந்தருகுவர், அடங்காதோரே.

திணை அது; துறை செவியறிவுறூஉ.
அவனை வெள்ளைக்குடி நாகனார் பாடி, பழஞ் செய்க்கடன் வீடுகொண்டது.

40
நீயே, பிறர் ஓம்புறு மற மன் எயில்
ஓம்பாது கடந்து அட்டு, அவர்
முடி புனைந்த பசும் பொன் நின்
அடி பொலியக் கழல் தைஇய
5
வல்லாளனை; வய வேந்தே!
யாமே, நின், இகழ் பாடுவோர் எருத்து அடங்க,
புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற,
இன்று கண்டாங்குக் காண்குவம் என்றும்
இன்சொல் எண் பதத்தை ஆகுமதி பெரும!
10
ஒரு பிடி படியும் சீறிடம்
எழு களிறு புரக்கும் நாடு கிழவோயே!

திணை அது; துறை செவியறிவுறூஉ.
அவனை ஆவூர் முலங்கிழார் பாடியது.

55
ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ,
ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி,
பெரு விறல் அமரர்க்கு வென்றி தந்த
கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்
5
பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல,
வேந்து மேம்பட்ட பூந் தார் மாற!
கடுஞ் சினத்த கொல் களிறும்; கதழ் பரிய கலி மாவும்,
நெடுங் கொடிய நிமிர் தேரும், நெஞ்சு உடைய புகல் மறவரும், என
நான்குடன் மாண்டதுஆயினும், மாண்ட
10
அற நெறி முதற்றே, அரசின் கொற்றம்;
அதனால், 'நமர்' எனக் கோல் கோடாது,
'பிறர்' எனக் குணம் கொல்லாது,
ஞாயிற்று அன்ன வெந் திறல் ஆண்மையும்,
திங்கள் அன்ன தண் பெருஞ் சாயலும்,
15
வானத்து அன்ன வண்மையும், மூன்றும்,
உடையை ஆகி, இல்லோர் கையற,
நீ நீடு வாழிய நெடுந்தகை! தாழ் நீர்
வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்
நெடு வேள் நிலைஇய காமர் வியன் துறை,
20
கடு வளி தொகுப்ப ஈண்டிய
வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே!

திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ.
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரை மருதன் இளநாகனார் பாடியது.

184
காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,
மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;
நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;
5
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,
10
யானை புக்க புலம் போல,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.

திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ.
பாண்டியன் அறிவுடை நம்பியுழைச் சென்ற பிசிராந்தையார் பாடியது.