துணைவஞ்சி

36
அடுநை ஆயினும், விடுநை ஆயினும்,
நீ அளந்து அறிதி, நின் புரைமை வார் கோல்,
செறி அரிச் சிலம்பின், குறுந் தொடி மகளிர்
பொலம் செய் கழங்கின் தெற்றி ஆடும்
5
தண் ஆன்பொருநை வெண் மணல் சிதைய,
கருங் கைக் கொல்லன் அரம் செய் அவ் வாய்
நெடுங் கை நவியம் பாய்தலின், நிலை அழிந்து,
வீ கமழ் நெடுஞ் சினை புலம்ப, காவுதொறும்
கடி மரம் தடியும் ஓசை தன் ஊர்
10
நெடு மதில் வரைப்பின் கடி மனை இயம்ப,
ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு, ஈங்கு, நின்
சிலைத் தார் முரசம் கறங்க,
மலைத்தனை என்பது நாணுத் தகவு உடைத்தே.

திணை வஞ்சி; துறை துணைவஞ்சி.
அவன் கருவூர் முற்றியிருந்தானை ஆலத்தூர் கிழார் பாடியது.

45
இரும் பனை வெண் தோடு மலைந்தோன்அல்லன்;
கருஞ் சினை வேம்பின் தெரியலோன்அல்லன்;
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே;
5
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே;
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்,
குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித் தேர்
நும் ஓர்அன்ன வேந்தர்க்கு
மெய்ம் மலி உவகை செய்யும்; இவ் இகலே.

திணை வஞ்சி; துறை துணைவஞ்சி.
சோழன் நலங்கிள்ளி உறையூர் முற்றி இருந்தானையும், அடைத்திருந்த நெடுங் கிள்ளியையும், கோவூர் கிழார் பாடியது.

46
நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை,
இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சி,
தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்;
5
களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த
புன் தலைச் சிறாஅர்; மன்று மருண்டு நோக்கி,
விருந்தின் புன்கண் நோவுடையர்;
கேட்டனைஆயின், நீ வேட்டது செய்ம்மே!

திணையும் துறையும் அவை.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக்கு இடுவுழி, கோவூர் கிழார் பாடி, உய்யக் கொண்டது.

47
வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி,
'நெடிய' என்னாது சுரம் பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடி,
பெற்றது மகிழ்ந்து, சுற்றம் அருத்தி,
5
ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி,
வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீது அறிந்தன்றோ? இன்றே; திறப்பட
நண்ணார் நாண, அண்ணாந்து ஏகி,
ஆங்கு இனிது ஒழுகின் அல்லது, ஓங்கு புகழ்
10
மண் ஆள் செல்வம் எய்திய
நும் ஓரன்ன செம்மலும் உடைத்தே.

திணையும் துறையும் அவை.
சோழன் நளங்கிள்ளியுழைநின்று உறையூர் புகுந்த இளந்தத்தன் என்னும் புலவனை, காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, 'ஒற்று வந்தான்' என்று கொல்லப் புக்குழி, கோவூர் கிழார் பாடி, உய்யக்கொண்டது.

57
வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன,
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற!
நின் ஒன்று கூறுவது உடையேன்: என் எனின்,
5
நீயே, பிறர் நாடு கொள்ளும்காலை, அவர் நாட்டு
இறங்கு கதிர்க் கழனி நின் இளையரும் கவர்க;
நனந் தலைப் பேர் ஊர் எரியும் நைக்க;
மின்னு நிமிர்ந்தன்ன நின் ஒளிறு இலங்கு நெடு வேல்
ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்
10
கடிமரம் தடிதல் ஓம்பு நின்
நெடு நல் யானைக்குக் கந்து ஆற்றாவே.

திணை வஞ்சி; துறை துணை வஞ்சி.
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

213
மண்டு அமர் அட்ட மதனுடை நோன் தாள்,
வெண்குடை விளக்கும், விறல் கெழு வேந்தே!
பொங்கு நீர் உடுத்த இம் மலர் தலை உலகத்து,
நின்தலை வந்த இருவரை நினைப்பின்,
5
தொன்று உறை துப்பின் நின் பகைஞரும் அல்லர்,
அமர் வெங் காட்சியொடு மாறு எதிர்பு எழுந்தவர்;
நினையும்காலை, நீயும் மற்றவர்க்கு
அனையை அல்லை; அடு மான் தோன்றல்!
பரந்து படு நல் இசை எய்தி, மற்று நீ
10
உயர்ந்தோர் உலகம் எய்தி; பின்னும்
ஒழித்த தாயம் அவர்க்கு உரித்தன்றே:
அதனால், அன்னது ஆதலும் அறிவோய்! நன்றும்
இன்னும் கேண்மதி, இசை வெய்யோயே!
நின்ற துப்பொடு நிற் குறித்து எழுந்த
15
எண் இல் காட்சி இளையோர் தோற்பின்,
நின் பெருஞ் செல்வம் யார்க்கு எஞ்சுவையே?
அமர் வெஞ் செல்வ! நீ அவர்க்கு உலையின்,
இகழுநர் உவப்ப, பழி எஞ்சுவையே;
அதனால், ஒழிகதில் அத்தை, நின் மறனே! வல் விரைந்து
20
எழுமதி; வாழ்க, நின் உள்ளம்! அழிந்தோர்க்கு
ஏமம் ஆகும் நின் தாள் நிழல் மயங்காது
செய்தல் வேண்டுமால், நன்றே வானோர்
அரும் பெறல் உலகத்து ஆன்றவர்
விதும்புறு விருப்பொடு விருந்து எதிர் கொளற்கே.

திணை வஞ்சி; துறை துணைவஞ்சி.
அவன் மக்கள்மேல் சென்றானைப் புல்லாற்றூர் எயிற்றியனார் பாடியது.