முதுபாலை

253
என் திறத்து அவலம் கொள்ளல், இனியே;
வல ஆர் கண்ணி இளையர் திளைப்ப,
'நகாஅல்' என வந்த மாறே, எழா நெல்
பைங் கழை பொதி களைந்தன்ன விளர்ப்பின்,
5
வளை இல், வறுங் கை ஓச்சி,
கிளையுள் ஒய்வலோ? கூறு நின் உரையே!

திணை பொதுவியல்; துறை முதுபாலை.
....................குளம்பாதாயனார் பாடியது.

254
இளையரும் முதியரும் வேறு புலம் படர,
எடுப்ப எழாஅய், மார்பம் மண் புல்ல,
இடைச் சுரத்து இறுத்த மள்ள! விளர்த்த
வளை இல் வறுங் கை ஓச்சி, கிளையுள்,
5
'இன்னன் ஆயினன், இளையோன்' என்று,
நின் உரை செல்லும் ஆயின், 'மற்று
முன் ஊர்ப் பழுனிய கோளி ஆலத்து,
புள் ஆர் யாணர்த்தற்றே, என் மகன்
வளனும் செம்மலும் எமக்கு' என, நாளும்
10
ஆனாது புகழும் அன்னை
யாங்கு ஆகுவள்கொல்? அளியள் தானே!

திணையும் துறையும் அவை.
...................கயமனார் பாடியது.

255
'ஐயோ!' எனின், யான் புலி அஞ்சுவலே;
அணைத்தனன் கொளினே, அகல் மார்பு எடுக்கவல்லேன்;
என் போல் பெரு விதிர்ப்புறுக, நின்னை
இன்னாது உற்ற அறன் இல் கூற்றே!
5
நிரை வளை முன் கை பற்றி
வரை நிழல் சேர்கம் நடத்திசின் சிறிதே!

திணையும் துறையும் அவை.
....................வன்பரணர் பாடியது.

256
கலம் செய் கோவே! கலம் செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறு வெண் பல்லி போல, தன்னொடு
சுரம் பல வந்த எமக்கும் அருளி,
5
வியல் மலர் அகன் பொழில் ஈமத் தாழி
அகலிதாக வனைமோ
நனந் தலை மூதூர்க் கலம் செய் கோவே!

திணையும் துறையும் அவை.
..............................................................