முகப்பு | ![]() |
வஞ்சினக் காஞ்சி |
71 |
மடங்கலின் சினைஇ, மடங்கா உள்ளத்து, |
|
அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து, |
|
என்னொடு பொருதும் என்ப; அவரை |
|
ஆர் அமர் அலறத் தாக்கி, தேரொடு |
|
5 |
அவர்ப் புறங்காணேன் ஆயின் சிறந்த |
பேர் அமர் உண்கண் இவளினும் பிரிக; |
|
அறன் நிலை திரியா அன்பின் அவையத்து, |
|
திறன் இல் ஒருவனை நாட்டி, முறை திரிந்து |
|
மெலிகோல் செய்தேன் ஆகுக; மலி புகழ் |
|
10 |
வையை சூழ்ந்த வளம் கெழு வைப்பின் |
பொய்யா யாணர் மையல் கோமான் |
|
மாவனும், மன் எயில் ஆந்தையும், உரை சால் |
|
அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும், |
|
வெஞ் சின இயக்கனும், உளப்படப் பிறரும், |
|
15 |
கண் போல் நண்பின் கேளிரொடு கலந்த |
இன் களி மகிழ் நகை இழுக்கி யான் ஒன்றோ, |
|
மன்பதை காக்கும் நீள் குடிச் சிறந்த |
|
தென் புலம் காவலின் ஒரீஇ, பிறர் |
|
வன் புலம் காவலின் மாறி யான் பிறக்கே! |
|
திணை காஞ்சி; துறை வஞ்சினக் காஞ்சி.
| |
ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் பாட்டு.
|
72 |
'நகுதக்கனரே, நாடு மீக்கூறுநர்; |
|
இளையன் இவன்' என உளையக் கூறி, |
|
'படு மணி இரட்டும் பா அடிப் பணைத் தாள் |
|
நெடு நல் யானையும், தேரும், மாவும், |
|
5 |
படை அமை மறவரும், உடையம் யாம்' என்று |
உறு துப்பு அஞ்சாது, உடல் சினம் செருக்கி, |
|
சிறு சொல் சொல்லிய சினம் கெழு வேந்தரை |
|
அருஞ் சமம் சிதையத் தாக்கி, முரசமொடு |
|
ஒருங்கு அகப்படேஎன் ஆயின் பொருந்திய |
|
10 |
என் நிழல் வாழ்நர் செல் நிழல் காணாது, |
'கொடியன் எம் இறை' எனக் கண்ணீர் பரப்பி, |
|
குடி பழி தூற்றும் கோலேன் ஆகுக; |
|
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி |
|
மாங்குடி மருதன் தலைவன் ஆக, |
|
15 |
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின் |
புலவர் பாடாது வரைக, என் நிலவரை; |
|
புரப்போர் புன்கண் கூர, |
|
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் பாட்டு.
|
73 |
மெல்ல வந்து, என் நல் அடி பொருந்தி, |
|
'ஈ' என இரக்குவர் ஆயின், சீருடை |
|
முரசு கெழு தாயத்து அரசோ தஞ்சம்; |
|
இன் உயிர் ஆயினும் கொடுக்குவென், இந் நிலத்து; |
|
5 |
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது, என் |
உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின் |
|
துஞ்சு புலி இடறிய சிதடன் போல, |
|
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக் |
|
கழை தின் யானைக் கால் அகப்பட்ட |
|
10 |
வன் திணி நீள் முளை போல, சென்று, அவண் |
வருந்தப் பொரேஎன்ஆயின், பொருந்திய |
|
தீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப் |
|
பல் இருங் கூந்தல் மகளிர் |
|
ஒல்லா முயக்கிடைக் குழைக, என் தாரே! |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் நலங்கிள்ளி பாட்டு.
|