வல்லாண் முல்லை

170
மரை பிரித்து உண்ட நெல்லி வேலி,
பரலுடை முன்றில், அம் குடிச் சீறூர்,
எல் அடிப்படுத்த கல்லாக் காட்சி
வில் உழுது உண்மார் நாப்பண், ஒல்லென,
5
இழி பிறப்பாளன் கருங் கை சிவப்ப,
வலி துரந்து சிலைக்கும் வன் கண் கடுந் துடி
புலி துஞ்சு நெடு வரைக் குடிஞையோடு இரட்டும்
மலை கெழு நாடன், கூர்வேல் பிட்டன்,
குறுகல் ஓம்புமின், தெவ்விர்! அவனே
10
சிறு கண் யானை வெண் கோடு பயந்த
ஒளி திகழ் முத்தம் விறலியர்க்கு ஈத்து,
நார் பிழிக் கொண்ட வெங் கள் தேறல்
பண் அமை நல் யாழ்ப் பாண் கடும்பு அருத்தி,
நசைவர்க்கு மென்மை அல்லது, பகைவர்க்கு
15
இரும்பு பயன் படுக்கும் கருங் கைக் கொல்லன்
விசைத்து எறி கூடமொடு பொரூஉம்
உலைக் கல் அன்ன, வல்லாளன்னே.

திணை வாகை; துறை வல்லாண் முல்லை; தானைமறமும் ஆம்.
அவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

178
கந்து முனிந்து உயிர்க்கும் யானையொடு, பணை முனிந்து
கால் இயல் புரவி ஆலும் ஆங்கண்,
மணல் மலி முற்றம் புக்க சான்றோர்
உண்ணார் ஆயினும், தன்னொடு சூளுற்று,
5
'உண்ம்' என இரக்கும் பெரும் பெயர்ச் சாத்தன்
ஈண்டோ இன் சாயலனே; வேண்டார்
எறி படை மயங்கிய வெருவரு ஞாட்பின்,
கள்ளுடைக் கலத்தர் உள்ளூர்க் கூறிய
நெடுமொழி மறந்த சிறு பேராளர்
10
அஞ்சி நீங்கும்காலை,
ஏமமாகத் தான் முந்துறுமே.

திணை வாகை; துறை வல்லாண் முல்லை.
பாண்டியன் கீரஞ்சாத்தனை அவர் பாடியது.

181
மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில்,
கருங் கண் எயிற்றி காதல் மகனொடு,
கான இரும் பிடிக் கன்று தலைக் கொள்ளும்
பெருங் குறும்பு உடுத்த வன் புல இருக்கை,
5
புலாஅ அம்பின், போர் அருங் கடி மிளை,
வலாஅரோனே, வாய் வாள் பண்ணன்;
உண்ணா வறுங் கடும்பு உய்தல் வேண்டின்,
இன்னே சென்மதி, நீயே சென்று, அவன்
பகைப் புலம் படராஅளவை, நின்
10
பசிப் பகைப் பரிசில் காட்டினை கொளற்கே.

திணையும் துறையும் அவை.
வல்லார் கிழான் பண்ணனைச் சோணாட்டு முகையலூர்ச் சிறு கருந்தும்பியார் பாடியது.

313
அத்தம் நண்ணிய நாடு கெழு பெருவிறல்
கைப் பொருள் யாதொன்றும் இலனே; நச்சிக்
காணிய சென்ற இரவல் மாக்கள்
களிறொடு நெடுந் தேர் வேண்டினும், கடவ;
5
உப்பு ஒய் சாகாட்டு உமணர் காட்ட
கழி முரி குன்றத்து அற்றே,
எள் அமைவு இன்று, அவன் உள்ளிய பொருளே.

திணை அது; துறை வல்லாண் முல்லை.
மாங்குடி கிழார் பாடியது.

314
மனைக்கு விளக்கு ஆகிய வாணுதல் கணவன்,
முனைக்கு வரம்பு ஆகிய வென் வேல் நெடுந் தகை,
நடுகல் பிறங்கிய உவல் இடு பறந்தலை,
புன் காழ் நெல்லி வன் புலச் சீறூர்க்
5
குடியும் மன்னும் தானே; கொடி எடுத்து
நிறை அழிந்து எழுதரு தானைக்குச்
சிறையும் தானே தன் இறை விழுமுறினே.

திணையும் துறையும் அவை.
ஐயூர் முடவனார் பாடியது.

315
உடையன்ஆயின் உண்ணவும் வல்லன்;
கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்;
மடவர் மகிழ் துணை; நெடு மான் அஞ்சி
இல் இறைச் செரீஇய ஞெலிகோல் போல,
5
தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்றதன்
கான்று படு கனை எரி போல,
தோன்றவும் வல்லன் தான் தோன்றுங்காலே.

திணையும் துறையும் அவை.
நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

316
கள்ளின் வாழ்த்தி, கள்ளின் வாழ்த்தி,
காட்டொடு மிடைந்த சீயா முன்றில்,
நாட் செருக்கு அனந்தர்த் துஞ்சுவோனே.
அவன் எம் இறைவன்; யாம் அவன் பாணர்;
5
நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன்
இரும் புடைப் பழ வாள் வைத்தனன்; இன்று இக்
கருங் கோட்டுச் சீறியாழ் பணையம்; இது கொண்டு
ஈவதிலாளன் என்னாது, நீயும்,
வள்ளி மருங்குல் வயங்கு இழை அணிய,
10
கள்ளுடைக் கலத்தேம் யாம் மகிழ் தூங்க,
சென்று வாய் சிவந்து மேல் வருக
சிறு கண் யானை வேந்து விழுமுறவே.

திணையும் துறையும் அவை.
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் பாடியது.

317
வென் வேல் ................................. நது
முன்றில் கிடந்த பெருங் களியாற்கு
அதள் உண்டாயினும், பாய் உண்டாயினும்,
யாது உண்டாயினும், கொடுமின் வல்லே;
5
வேட்கை மீளப
..................கும், எமக்கும், பிறர்க்கும்,
யார்க்கும், ஈய்ந்து, துயில் ஏற்பினனே.

திணையும் துறையும் அவை.
வேம்பற்றூர்க் குமரனார் பாடியது.

318
கொய் அடகு வாட, தரு விறகு உணங்க,
மயில்அம் சாயல் மாஅயோளொடு
பசித்தன்று அம்ம, பெருந்தகை ஊரே
மனை உறை குரீஇக் கறை அணல் சேவல்,
5
பாணர் நரம்பின் சுகிரொடு, வய மான்
குரல் செய் பீலியின் இழைத்த குடம்பை,
பெருஞ் செய் நெல்லின் அரிசி ஆர்ந்து, தன்
புன் புறப் பெடையொடு வதியும்
யாணர்த்து ஆகும் வேந்து விழுமுறினே.

திணையும் துறையும் அவை.
பெருங் குன்றூர் கிழார் பாடியது.

319
பூவல் படுவில் கூவல் தோண்டிய
செங் கண் சில் நீர் பெய்த சீறில்
முன்றில் இருந்த முது வாய்ச் சாடி
யாம் கஃடு உண்டென, வறிது மாசு இன்று;
5
படலை முன்றில் சிறு தினை உணங்கல்
புறவும் இதலும் அறவும் உண்கெனப்
பெய்தற்கு எல்லின்று பொழுதே; அதனான்,
முயல் சுட்ட ஆயினும் தருகுவேம்; புகுதந்து
ஈங்கு இருந்தீமோ, முது வாய்ப் பாண!
10
கொடுங் கோட்டு ஆமான் நடுங்கு தலைக் குழவி
புன் தலைச் சிறாஅர் கன்று எனப் பூட்டும்
சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்,
வேந்து விடு தொழிலொடு சென்றனன்; வந்து, நின்
பாடினி மாலை அணிய,
15
வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே.

திணையும் துறையும் அவை.
ஆலங்குடி வங்கனார் பாடியது.

320
முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி,
பந்தர் வேண்டாப் பலா தூங்கு நீழல்,
கைம்மான் வேட்டுவன் கனை துயில் மடிந்தென,
பார்வை மடப் பிணை தழீஇ, பிறிது ஓர்
5
தீர் தொழில் தனிக் கலை திளைத்து விளையாட,
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சி, கலையே
பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும்,
இல் வழங்காமையின், கல்லென ஒலித்து,
10
மான் அதள் பெய்த உணங்கு தினை வல்சி
கானக் கோழியோடு இதல் கவர்ந்து உண்டென,
ஆர நெருப்பின், ஆரல் நாற,
தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம்
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி,
15
தங்கினை சென்மோ, பாண! தங்காது,
வேந்து தரு விழுக் கூழ் பரிசிலர்க்கு என்றும்
அருகாது ஈயும் வண்மை
உரைசால் நெடுந் தகை ஓம்பும் ஊரே.

திணையும் துறையும் அவை.
வீரை வெளியனார் பாடியது.

321
பொறிப் புறப் பூழின் போர் வல் சேவல்
மேந் தோல் களைந்த தீம் கோள் வெள் எள்
சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டு, உடன்
வேனில் கோங்கின் பூம் பொகுட்டு அன்ன
5
குடந்தை அம் செவிய கோட்டு எலி ஆட்ட,
கலி ஆர் வரகின் பிறங்கு பீள் ஒளிக்கும்,
வன் புல வைப்பினதுவே சென்று
தின் பழம் பசீஇ ..........னனோ, பாண!
வாள் வடு விளங்கிய சென்னிச்
10
செரு வெங் குருசில் ஓம்பும் ஊரே.

திணையும் துறையும் அவை.
உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

322
உழுது ஊர் காளை ஊழ் கோடு அன்ன
கவை முள் கள்ளிப் பொரி அரைப் பொருந்தி,
புது வரகு அரிகால் கருப்பை பார்க்கும்
புன் தலைச் சிறாஅர் வில் எடுத்து ஆர்ப்பின்,
5
பெருங் கண் குறு முயல் கருங் கலன் உடைய
மன்றில் பாயும் வன் புலத்ததுவே
கரும்பின் எந்திரம் சிலைப்பின், அயலது.
இருஞ் சுவல் வாளை பிறழும் ஆங்கண்,
தண் பணை ஆளும் வேந்தர்க்குக்
10
கண் படை ஈயா வேலோன் ஊரே.

திணையும் துறையும் அவை.
ஆவூர் கிழார் பாடியது.