நன்றியுரை

ஆரா யணியன்னத் தாளக வாசிரி யன்முருகன்
நேரா யுரைவள் ளுவன்குற ளுற்றிட நீணிலத்தில்
சீரார் தமிழ்ப்புல வன்கந்த சாமியுஞ் சேர்துணையால்
ஈரா யிரத்தின் மிகவெண்பொன் றான்றொகுத் தீந்தனனே.

தொடைகெழு பாபுனை காவிரி துன்றுந் திருச்சிநக
ரிடையொரு சாலை கல் லூரிமெய் யன்பர் விடுத்தபண
விடைவழு வாது மதிதொறும் வந்து விழுக்குறள்தென்
நடைகொளு மிவ்வுரை யச்சீடு நன்றாய் நடந்ததுவே

பத்திற் குறையா மதிபல் லகஞ்சென்றும் பாகமன்றி
மெத்தக் கவன்றும் முடியாவிம் மெய்ந்நூல் மரபுரைதான்
தித்தித் தொழுகிந் தியநாட்டு வைப்பகத் தின்கணக்கன்
முத்துக் கிருட்டிணன் இல்லம் புகுந்ததும் முற்றியதே

பணத்திற்கு மூன்று படிவிற்ற காலை பரிந்துகம்பன்
உணத்தந்த வள்ளல் சடையன் உதவிய தோர்வியப்போ
கிணற்றிற்குட் கேணியு மூறாநாள் முத்துக் கிருட்டிணன்றான்
குணத்திற்கீ டின்றிக் கொடுத்தனன் யாவுங் குறிப்பறவே.

நாவிரும் பின்சுவை யேர்மண நல்லுணா நாளுமுண்ணத்
தேவனின் நேய னெனவென்னைத் தீதற வைகுவி த்தே
ஆவியன் முத்துக் கிருட்டிணன் என்னுரை யச்சகத்தை
மேவுவித் தேயதன் மெய்ப்புந் திருத்தினன் மேதகவே.