பின்னிணைப்பு

1. உரையெச்சம்

முன்னுரை பக்.13.நல்கூர் வேள்வியார் என்ற பத்தி தொடங்கு முன்பு சேர்த்துப் படிக்க.

(1) நாகன்-நாகி என்பன ஆண்பாற் பெண்பாற் பெயர்களாகத் தமிழர்க்குத் தொன்று தொட்டு இடப்பட்டு வருவதானாலும் வாசுகி என்பது வடமொழித் தொல்கதைப்படி ஒரு பாம்பின் பெயராய் இருத்தலாலும் திருவள்ளுவர் மனைவியாரின் பெயர் ஒருகால் நாகி என்று இருந்திருக்கலாம் என்று மறைமலையடிகள் கருதுவர்.

(2) பக். 15. வரி ஐந்தில் சேர்த்துப் படிக்க.

'நட்டகல்லைத் தெய்வமென்று' என்னும் சிவவாக்கியர் பாடலும்.

31. சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினூஉங்
காக்க மெவனோ வுயிர்க்கு.

இனி, "சிறப்பீனும் செல்வமு மீனும்" என்பதற்கு, ஏதேனுமொரு துறையில் தலைமை பெறுதற்கேற்ற சிறப்பாற்றலையுந் தரும்;எண்வகைச் செல்வமுந் தரும் என்று உரை கூறினுமாம்.

38. வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்.

மூவகைக் குற்றத்தால் வரும் இருவகைவினையும் உள்ளவரை உயிர் உடம்போடு கூடிநின்று அவ்வினைகளின் இருவகைப் பயனையும் நுகருமாகலின், அந்நாளெல்லாம் 'வாழ்நாள், எனப்பட்டன.மூவகைக் குற்றம் காமம்,வெகுளி, மயக்கம் என்பன. இவற்றை வடநூலார் அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பு என ஐந்தாக விரித்துப் பஞ்சக்கிலேசம் என்பர். அவற்றுள் அகங்காரம் மயக்கத்துள்ளும் அவா காமத்துள்ளும் அடங்கும். இருவகை வினை நல்வினை தீவினை என்பன.இருவகைப்பயன் இன்பந்துன்பமென்பன. இனி,'வாழ்நாள் வழியடைக்குங் கல்' என்பதற்கு, ஒருவரது நிலத்தினூடு தவறாகச் செல்லும் வழியிற் பிறர் செல்லாதவாறு வைத்தடைக்குங் கல்போல, வாழ்நாள் என்னும் தீயவழியில் உயிர் செல்லாதவாறு வைத் தடைக்குங்கல் எனினுமாம். இது உருவகவணி,