குடியுள் அடக்கப்பட்டது. செங்கோலோ கொடுங்கோலோ ஓச்சும் அமைச்சுக் கோவரசே அற்றையரசு வகையாம்.

செங்கோலரசன், அமைச்சன் படைத்தலைவன் தூதன் ஒற்றன் ஆகியோரை அறம்பொருளின்ப வுயிரச்சமென்னும் நால்வகைத் தேர்திறங்களால் தேர்ந்தெடுத்து, நாட்டுவளத்தையும் வருவாயையும் பெருக்கி, வந்த பொருள்களை அறம் பொருளின் பங்கட்குச் செலவிட்டு, சிறந்த படையரண் அமைத்து, காட்சிக் கெளியனாய்க் கடுஞ்சொல்லனல்லனாய் நடுநிலையாகக் குற்றவாளியைத் தண்டித்து முறைசெய்து, சிற்றினஞ்சேராது பெரியாரைத் துணைக்கொண்டு சுற்றந்தழுவி நட்பிற் பிழைபொறுத்து, நால்வகை ஆம்புடைகளைக் கையாண்டு பிறவரசரொடு பழகி, பேதைப் பெண்வழிச் செல்லாது பொதுமகளிரொடு கூடாது, கள்ளுண்ணாது, சூதாடாது, அளவறிந்துண்டு நோய்வராமற்காத்து, தளர்ந்த குடிகளைக் கைதூக்கிச் சிறந்த அமைச்சர்க்கும் படைத்தலைவர்க்கும் பெருஞ்சிறப்புச் செய்து, ஐவகைத் துன்பமும் வராமல் அன்பாகக் குடிகளைக் காத்தல்வேண்டுமென்பதே திருக்குறள் அரசியலாம்.

இற்றை அரசு எவ்வெவ்வகையா யிருப்பினும், செங்கோன்மையைப் பொறுத்தமட்டில் திருக்குறள்முறையே எல்லாவற்றிற்கும் ஏற்பதாம்.

இனி, நட்பு என்பது புறத்துறுப்பாயினும், ஈறாயிரம் ஆண்டுகட்குமுன் திருவள்ளுவர் வற்புறுத்தியவாறே இன்றும் அது வல்லரசு கட்கும் இன்றியமையாததாயிருப்பதை, அமெரிக்க ஒன்றிய நாடுகளும் இரசியாவும் ஏனை நாடுகளைத் தம்வயப்படுத்துவதற்கு எல்லா முயற்சிகளும் இடைவிடாது செய்துவருதலால் அறிக.

12. நாற்பொருளும் முப்பாலும்

மக்கள் வாழ்க்கைக் குறிக்கோள் அறம்பொருளின்பம் வீடென்னும் நான்கென முதன்முதற் கண்டவர் தமிழரேயென்பதும், வீட்டைக் கண்டு திரும்பியவர் இங்கொருவரு மின்மையின் அது அறவொழுக்க மாகிய வாயில்வகையாலும் அகப்பொருளின்பமாகிய உவமை வகையாலுமன்றித் தனித்துக் கூறப்படாதென்பதும், அதனால் நாற்பொருளும் என்றும் அறம்பொருளின்பமென்னும் முப்பாலாகவே யமையுமென்பதும், முன்னரே முன்னுரையிற் கூறப்பட்டுவிட்டன.