திருவள்ளுவமாலை
 

கடுகைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள் 

 

- இடைக்காடர்

 

அணுவைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்

 

- ஒளவையார்

 

தானே முழுதுணர்ந்து தண்தமிழின் வெண்குறளால்
ஆனா அறமுதலா அந்நான்கும் - ஏனோருக்(கு)
ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்
வாழிஉலகு என்ஆற்று மற்று

 

- நக்கீரனார்

 

பரந்த பொருளெல்லாம் பாரறிய வேறு
தெரிந்து திறந்தொறும் சேரச் - சுருங்கிய 
சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல்
வல்லார்ஆர் வள்ளுவரல் லால்.

 

- அரிசில் கிழார்

 

ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளும்
பாயிரத்தி னோடு பகர்ந்ததன்பின் - போயொருத்தர்
வாய்க்கேட்க நூலுளவோ மன்னு தமிழ்ப்புலவ
ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்.

 

- நத்தத்தனார்

 

உள்ளுதல் உள்ளி உரைத்தல் உரைத்ததனைத்
தெள்ளுத லன்றே செயற்பால - வள்ளுவனார்
முப்பாலின் மிக்க மொழியுண் டெனப்பகர்வார்
எப்பா வலரினும் இல்.

 

- முகையலூர்ச் 
 சிறுகருந்தும்பியார்
ஓதற்கு எளிதாய் உணர்தற்கு அரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித் தீதற்றோர்
உள்ளுதொ றுள்ளுதொறு உள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு.

 

- மாங்குடி மருதனார்

 

எல்லாப் பொருளும் இதன்பால் உளஇதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால் - சொல்லால்
பரந்தபா வால்என் பயன்வள் ளுவனார்
சுரந்தபா வையத் துணை.

 

- மதுரைத் தமிழ்நாகனார்

 

புலவர் திருவள் ளுவர்அன்றிப் பூமேல்
சிலவர் புலவர்எனச் செப்பல் - நிலவு
பிறங்கொளிமா லைக்கும் பெயர்மாலை மற்றும்
கறங்குஇருள்மா லைக்கும் பெயர்.

 

- மதுரைத் தமிழாசிரியர்
  செங்குன்றூர் கிழார்