இந் நூலை ஆக்கியவர் மதுரைக் கூடலூர் கிழார். கூடலூர் இவர் பிறந்தஊராயும், மதுரை பின்பு புகுந்து வாழ்ந்த ஊராயும் இருத்தல் கூடும். கிழார் என்னும் குறிப்பினால் இவரை வேளாண் மரபினர் என்று கொள்ளலாம். தொல்காப்பிய மரபியலில்,
ஊரும் பேரும் உடைத் தொழிற் கருவியும் யாரும் சார்த்தி அவை அவை பெறுமே.
என்ற சூத்திர உரையில் 'அம்பர்கிழான் நாகன், வல்லங்கிழான் மாறன் என்பன வேளாளர்க்கு உரியன' என வரும் குறிப்பு மேற்கூறிய கருத்தை வலியுறுத்தும், தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் உடைமைப்பெயர்க்கு உதாரணமாக அம்பர் கிழான், பேரூர்கிழான்' என்பவை காட்டப்பட்டுள்ளன. இது கொண்டு கூடலூரைத் தம் உடைமையாகக் கொண்டவர் கூடலூர்கிழார் என்றும் ஊகிக்கலாம். அரிசில் கிழார், ஆவூர் கிழார், காரி கிழார், கோவூர் கிழார், என்று இவ்வாறு கிழார் என்னும் சிறப்புடன் புலவர் பலர்சங்க நூல்களிலும் காணப்படுகின்றனர்.
சங்க நூல்களில் குறிக்கப்பெறும் கூடலூர் கிழாரும் இவரும் ஒருவர் அல்லர். சங்கப் புலவர் 'புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்' என்று குறிக்கப் பெறுகிறார். இவ் இருவரையும் குறிக்கும் அடைமொழி வேறுபாடே இருவரும் வேறு வேறு புலவர் என்பதைப் புலப்படுத்தும். மேலும், முதுமொழிக் காஞ்சியில் வரும் விழைச்சு, சொன்மலை, மீப்பு முதலிய பிற்காலச் சொல்லாட்சிகளும் இவர் சங்கப் புலவர் காலத்திற்குப் பிற்பட்டவர் என்பதைத் தெளிவுபடுத்தும். டாக்டர் உ.வே. சாமிநாதையர் புறநானூற்றில் தாம் எழுதிய பாடினோர் வரலாற்றில், 'முதுமொழிக் காஞ்சியை இயற்றிய மதுரைக் கூடலூர் கிழார் வேறு; இவர் வேறு' என்று குறித்துள்ளார்.
தொண்டை மண்டல சதகமுடையார்.'....முதுமொழிக் காஞ்சி சொற்ற, வார் ஆர் புரிசைக் கிழவோனும் வாழ் தொண்டை மண்டலமே' (66) என்று தொண்டைநாட்டுப் புரிசை என்னும் ஊரினராக இவரைக் கூறிக்கொள்ளுதல் உண்மையொடு பட்டதன்று.
இந் நூலுள் பத்துப் பத்துகளும் ஒவ்வொரு பத்து முதுமொழிகளும் உள்ளன. ஒவ்வொருசெய்யுளின் முதல் அடியும், 'ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்' என்றே தொடங்குகின்றமையால் இந் நூல் நூறு குறள் வெண் செந்துறையாலானது எனலாம். எல்லா அடிகளிலும் பயின்று வரும் சொற் குறிப்பைக் கொண்டு, ஒவ்வொன்றும் சிறந்த பத்து, அறிவுப் பத்து என்று பெயர் பெற்றுள்ளது. ஒரு பிரதியில் 'முதுமொழிக் காஞ்சிப் பத்து' என்றே பெயர் குறிக்கப் பெற்றிருந்தது. பத்துப் பத்துகளைக் கொண்டமையால், இவ்வாறுபெயர் குறித்தார் போலும்.
நூறதாம் சிறுபஞ்ச மூலம்; நூறு சேர் முதுமொழிக் காஞ்சி.
எனவரும் பிரபந்த தீபிகைக் குறிப்பினால் முதுமொழிக் காஞ்சிநூறு எண்ணிக்கை உடையதாகக் கருதப் பெறுதலும் விளங்கும்.
இந் நூலை நச்சினார்க்கினியர் முதலிய பழைய உரையாசிரியர்கள் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார்கள். இந்நூல் முழுமைக்கும் தெளிவான பழைய பொழிப்புரை
உள்ளது.
|