மூன்று செய்யுட்கள் பா வகையால் வேறுபட்டபோதிலும், இவற்றிலும் நந்நான்கு பொருள்களே அமைந்துள்ளன.'நான்மணிக்கடிகை சதம்' என்று பிரபந்த தீபிகை ஆசிரியர் அளவு குறித்த போதிலும், மேற்குறித்த 101 செய்யுட்களுக்கும் பழைய உரை காணப்பெறுதலின், அவ் உரைகாரர் காலத்திலேயே நான்மணிக்கடிகை இவ்வாறு அமைந்துள்ளமை தெளிவாம்.

சுன்னாகம் குமாரசுவாமிப்பிள்ளை அவர்கள் வெளியிட்ட யாழ்ப்பாணப் பதிப்பில், 'கல்லில்பிறக்கும்' (5), 'நகை இனிது' (36) 'யானைஉடையார்' (53),என்னும் மூன்று செய்யுட்களும் காணப்படவில்லை. 65,66-ஆம் செய்யுட்கள் முன்பின்னாக வரிசை மாறிஉள்ளன. 'புகை வித்தாப்' (30) என்ற செய்யுளின் பின்,'முனியார் அரிய' எனத் தொடங்கும் ஒரு புதிய செய்யுள் தரப்பட்டுள்ளது. இது மிகைப் பாடலாக இப்பதிப்பில்நூல் இறுதியில் இணைக்கப்பெற்றுள்ளது.

இந் நூலுக்குப் பழைய பொழிப்புரை ஒன்று உள்ளது. சிற்சில இடங்களில் பொருள் நயத்தைத்தனிப்பட எடுத்துக்காட்டுவதோடு, பாட வேறுபாடுகளையும் ஒரு சில இடங்களில் சுட்டிக் காட்டிக் கருத்தைப்புலப்படுத்தியும் இவ் உரை அமைந்துள்ளது. சுருக்கமும்தெளிவும் இவ் உரையின் தனி இயல்புகள்.