முன்னுரை

பழமொழி நானூறு என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. ஒரு நாட்டின் பண்பாட்டை உணர்தற்கு அந் நாட்டுமொழியுள் வழங்கும் பழமொழிகள் பெரிதும் பயன்படுகின்றன. பழமொழிகளே அந்நாட்டு மக்களால் அடிப்பட்டுவரும் மன இயல்புகளை எடுத்துக் காட்டுகின்றனவல்லவோ? உலகவழக்காகிய இப்பழமொழிகளின் மேன்மையைக் கருதி இப் பழமொழிகளைக் கையாண்டு பொருள்சிறக்கச் செய்தல் நாவன்மையுடைய கற்றோர்க்கும் மற்றோர்க்கும் இயல்பாகிறது. பழமொழிகளைச் சிறந்த உரைநடையாசிரியர் எவரும் கையாளுவர். பழமொழிகள் பயின்றுவரச் செய்யுள்நூல் இயற்றும் தன்மை பேரறிஞர் நூல்களில் காணப்படும். இங்ஙனம் பழமொழியின் பொருட்சிறப்பை யுணர்ந்து அறிஞர் அவற்றைப் போற்றிக் கையாண்டாலும், தமிழ்நாட்டில் வழங்கிய சிறந்த பழமொழிகளைத் திரட்டி, ஒவ்வொரு பழமொழியைக்கொண்டும் தாங் கருதிய சிறந்த பொருள்களை விளக்கமுறுத்தக் கருதிய சமண்சமயப் பெரும் புலவோரான முன்றுறையரையனாரின் செய்கை தனிப் பெருந் தகுதிவாய்ந்ததாய்த் திகழ்கின்றது.

இவர் இயற்றிய இப் பழமொழி நானூற்றில் கடவுள் வாழ்த்து முதலான நானூறு வெண்பாக்களும் நானூறு பழமொழிகளைக் கொண்டு திகழ்கின்றன. பழமொழிகளை மனத்துக்கொண்டு, அவ்வப் பழமொழிகளால் விளக்கற்கேற்ற சிறந்த கருத்துக்களை எடுத்துக் கூறி, அப்பழமொழிகளை இயைபுபடுத்துகின்ற தன்மையால் நூல் இயன்றதனாலேயே, நூற்செய்யுள்களெல்லாம் பால் இயல்பாகுபாட்டுட்படாமல், ஒவ்வொரு வெண்பாவும் ஒவ்வொரு சிறந்த கருத்தை யுணர்த்தித் தனித்தனியே நின்றன. பயில்வார்க்கு எண்மையாயிருக்குமாறு, இப் பழமொழி நானூற்றுச் செய்யுள்களில் ஒருபொருண் மேலனவற்றைத்