பிரிவாகிய பாலையினைப் பின்வைத்து, அவற்றின் பயனாகிய ஊடலுங் கூடலுமென்ற மருதத்தினை விளக்கி, இவை பேரின்பத்தினை யண் முதற்குரிய பெருவழியேயன்றிப் பேறாகா எனத் தெளிய, இரங்கலாகிய நெய்தலினை யிறுதியிற் கூறிய வெழில் என்று மறக்கொணா மாட்சியதாகும்.

குறிஞ்சிக்கண் தலைமகள் தலைமகனை இயற்படமொழியும் எழிலும், அதற்கேற்ப இறைச்சிப் பொருளைக் கையாளும் ஏற்றமும், சான்றவர் கேண்மையின் தன்மையும் ஆன்றவரும் கண்டு அகமகிழற்குரியனவாம். தோழி செவிலிக்குப் படைத்துமொழி கிளவியாக, தலைமகள் புணர்ச்சி காரணமாகக் கண்சிவக்கப் பெற்றமையினை, “செந்நீரிழிதருங் கான்யாற்றுட் டேங்கலந்து வந்த அருவி குடைந்தாடத் தாஞ்சிவப்புற்றன கண்,” எனக் கூறுவதும், தலைமகனைத் தோழி வரைவு கடாவுங்கால், “நாட! ஒன்றுண்டோ வறிவின்கணின்ற மடம்,” எனப் பகரும் நாகரிகமும் நெஞ்சகத்தே நீளநினைக்கற்பாலவாம். மேலும், குறிஞ்சிநிலப் பண்புகள் பல்லாற்றான் விரிக்கப்படு முறைகளும் பார்த்து மகிழற்குரியவாம்.

முல்லைக்கண் எவருஞ் செல்லா முறையாகப் பன்னிரண்டு பாக்களிலும் பருவங்கண்டழிந்த தலைமகள் கூற்றாகக் கார்கால வியல்பினையும், மாலைக்காட்சியினையும் படிப்போர் மனத்தே படக்காட்சி போற்படியுமாறு கூறுவது பலருங் கொண்டாடிக் கொள்ளவேண்டியதாகும். இருபத்திரண்டாவது செய்யுட்கண் கார்காலமாலை வேளையில் காணப்பெறுங் காட்சியும், இருபத்தெட்டாவது செய்யுட்கண், மாலை வேளையில் ஆயன் பசுநிரைகளோடு மலர்மாலை சூடி வந்து கொண்டிருக்க அவன் பின்னாலே காலூன்றிப் பெய்து கொண்டே மழை தொடர்ந்து வருவதாகக் கூறிய செய்தியும் இத்திணைக்கண் மிகச் சிறப்புற்றுக் காணப்பெறுகின்றன. குதிரைகட்குத் தவளைகளைப் போன்று ஒலிக்கும் மணிமாலைகளிட்டிருந்த வழக்கும் இங்குக் காணப்படுகின்றது.

பாலைக்கண் போரிற்பட்ட மறவர்க்குக் கல்நடுதலும், அக்கல்லில் அம்மறவரின் செய்திகளை வரைந்து வைத்தலும், ஆந்தையொலி, தும்மல், பல்லிசொல், இடக்கண்ணாடலாகிய நிமித்த மறித