தலைமகற்கு வாயில் நேரும் வழக்கும், இரவுக்குறி நேரும் ஏற்றமும் எண்ணி யெண்ணி இன்புறற்பாலனவாம். தோழி தலைமகற்கு இரவுக்குறி நேருங்கால், தன்னையர் சூடுந் தாமரையினைத் தலைமகன் சூடிவரச் சொன்ன கருத்து, கண்டு வியக்கற் பாலதாம்.

நெய்தற்கண் சிறுமியர் விளையாடுஞ் செய்தியும், தோழி தலைமகளை இரவுக்குறி நயப்பிக்குங்கால் மேற்கொள்ளும், அறிவுச் சிறப்பும், கடற்கரையிலுள்ள பரதமகளிர் வீட்டமைப்பும் மிகச் சிறப்புடன் தென்படுகின்றன.

இந்நூலின்கண் நாற்பத்தாறு இன்னிசை வெண்பாக்களும், நான்கு நேரிசை வெண்பாக்களும் காணப்படுகின்றன. அவை மற்றைய சங்கநூல்களிற் காணப்பெறும் பாக்களைப் போன்றே சுருங்கச் சொல்லிப் பெரும்பொருள் பலவற்றை விரிக்கும் பெற்றியனவாகவுள்ளன. குறிஞ்சி முதற்செய்யுட்கண் முன்னிரண்டடிகள் ஏட்டுப் பிரதியின் சிதைவாற் காணப்பெறாவாய்ப் போயின. அவற்றைப் பின்வருந் தொடர்களின் பொருள்கொண்டும், பழைய வுரையின்கட் காணப்படும் சில சொற்களின் துணைகொண்டும் நிரப்புதல்செய்து, பழையவுரைக் குறிப்பில் பெரிய எழுத்துக்களான் அவை காட்டப்பட்டுள்ளன. இதனை இயற்றிய கண்ணன் சேந்தனார் என்ற பெரியார் சாத்தந்தையார் என்ற பெரியாரின் திருமகனாராவர். இதற்குமேல் இவரைப் பற்றிய செய்தி யாதுந் தெரிந்திலது.