திணைமாலை நூற்றைம்பது

துறை, சொற்றொடர் விளக்கம்.

[எண் - செய்யுளெண்]

குறிஞ்சி புணர்தலும் புணர்தனிமித்தமும் ஆகிய ஒழுக்கம்; மலைநாட்டில் நிகழ்வது.
மதியுடம்படுத்தல் தோழியின் அறிவுப் போக்கினைத் தலைவன் தனது விருப்பினை நிறைவேற்றற்குத் தகுதியாக மாற்றல். இது பாங்கியிற் கூட்டத்தின் பாற்படும்.
அறத்தொடு நிற்றல் களவுப் புணர்ச்சி யுண்மையைச் செவிலி முதலியோர்க்குக் கூறிவிடல்.
பகற்குறி பகற்காலத்தே தலைவனும் தலைவியும் தம்முள் எதிர்ப்பட்டுக் கூடும் இடம். இது தினைப்புனத்தின் அருகேயுள்ள பூஞ்சோலைக் கண்ணதாகும். இப் புணர்ச்சி களவின்கண் பாங்கியிற் கூட்டத்தின் பாலதாம்.
செறிப்பு அறிவுறீஇயது தலைவியை வீட்டின்கண் கொண்டு சேர்த்தலைத் தலைவனுக்குத் தெரிவித்தது.
அடா அடகு பணணையாகிய மகளிர் விளையாடும் இடம்.
இரவுக் குறி தலைவனும் தலைவியும் களவுப் புணர்ச்சியில் இராக்காலத்தே தம்முள் எதிர்ப்பட்டுக் கூடும் இடம். இது தலைவியின் இல்லினையடுத்த தோப்பின் கண்ணதாம். 
பின்னிலை முனிதல் தோழியின் பின்னின்று தன் குறை முடித்துக் கொள்ளுதலை வெறுத்தல்.
வெறி முருகனுக்குச் செய்யும் சிறப்பு விழா. 
சேட்படுத்தல் நெருங்கவொட்டாது விலக்கல்.
மடன்மா மேலூருதல் தலைவியைப் பெற முடியாது போயின விடத்துத் தலைவன் மேற்கொள்ளும் வினையாம். அவ்வினை இவ்வைந்திணைக்கும் அடங்காப் பெருந்திணையின் பாற்படும். அது பனை மடலாகிய கருக்கினாலே குதிரை யொன்று செய்து, அதன் கண் தலைவன் மெய்யெல்லாம் நீறு பூசி எலும்பு மாலை யணிந்து தலைவியின் வடிவ மெழுதிய ஓவியத்தைக் கையிற் பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்க, தலைவனைச் சார்ந்தோர் அக்குதிரையினைச்சிறிய சகட மொன்றினிற் சேர்த்துத் தலைவியின் வீதி வழியே இழுத்துச் செல்வதாம். அப்பொழுது தலைவியின் மேலுள்ள காதலால் தலைவன் பனைமடலால் உண்டாம் நோயினைப் பொருட்படுத்தாது செல்வன். அதனைக் கண்ட தலைவியின் உற்றார் வியந்து தலைமகளை அவனுக்கு மணம் புரிவிப்பர்.
கையுறைமறை தலைவன் தலைவியின் கையிற் சேர்க்கும் பரிசாகக்கொண்டுவந்த பொருளை யாதாமொன்று கூறித் தோழி முதலியோர் மறுத்தல்
தலைவியைப் பேதைமை யூட்டியது தலைவியினிடத்திற் பேதைமைக்குணம் பெருகியுள்ளதாகத் தோழி தலைவனுக்குச் சொல்லியது.
படைத்து மொழி கிளவி் தானாக வொன்றைக் கற்பித்துக்கூறுவது.  
வரைவு கடாதல் மணம் புரிந்து கொள்ளும்படி தூண்டுதல்
நெய்தல் இரங்கலும் இரங்கல் நிமித்தமுமாகிய ஒழுக்கம்.
சுலா யாது செய்வதென்று தோன்றாது மனத்தின்கண் உண்டாம் தடுமாற்றம். 
குறை நயப்பு தலைவன் தன் குறைகளைத் தோழியிடம் நயமாகத்தெரிவித்தல். 
பாலை பிரிதலும் பிரிதனிமித்தமுமாகிய ஒழுக்கம். 
பசப்பு தலைவனைப் பிரிந்த தலைவியர் கொள்ளும் மேனி் மாற்றம்."அறத்தொடு நிலை--உண்மையாகிய அறத்தினை மேற்கொண்டு செவிலி முதலியவர்களோடு சேர்ந்து நிற்றல்.
இற்செறிப்புக்காணல் மனையகம் புகல்.
சுரத்திடைச்சென்ற உடன்போக்கினை மேற்கொண்ட தலைவியைத் தேடிக்கொண்டு பாலை நிலவழியே சென்ற..
உலகினதியற்கை ஆண்மக்கள் பொருள் தேடுதல்.
செலவு அழுங்குவித்தல் செல்லுதலினின்றும் தவிர்வித்து வருந்தச் செய்தல்.
முல்லையாவது தலைவி தலைவன் வருகையை எதிர்பார்த்துக் கற்பாற்றியிருக்கும் ஒழுக்கமாம். அவ்வொழுக்கத்திற்குக்காரணமாயவைகளும் ஈண்டுக் கொள்ளப்படும்.
மருதம் ஊடலும் ஊடனிமித்தமுமாகிய ஒழுக்கம்.
ஆடாவரங்கு ஆற்றுநீர்; குறிப்பு மொழி; கூத்தியர் ஆடு தலின்றிப் புனலாடுவார்க் கிடமாகலின்.
காமக் கிழத்தி தலைவன் இன்பந்துய்த்தல் காரணமாக மேற்கொண்ட பரத்தையரிற் சிறிது சிறப்புள்ளவள்.
விடலை பாலை நிலத் தலைவன்.
உள்ளுறை யுவமம் கூறக் கருதியதனை வெளிப்படையாய்க் கூறுது கருப்பொருள்களி லேற்றிக் கூறுதல்.
இறைச்சிப் பொருள் கூறுகின்ற பொருட்கியைந்த முறையிற்கருப்பொருள்களை யமைத்துக் கூறல்.
மன்றல் மனை மண நிகழ்ந்த வீடு.
சிறந்த மொழியை ஒழிந்து நின்ற வாயில் பாணன்,
புளிவேட்கைத்து புளியம்பழத்தின்கண் மக்கள் கொள்ளும் விருப்பம்போல் மேலும் மேலும் விரும்புந் தன்மையது.
செய்பெருஞ்சிறப்பு பிறந்த புதல்வன் முகங்காண்டல். ஐம்படை பூட்டல். பெயரிடுதன் முதலியன.
அகம்புகல் மரபின் வாயில் தலைமகளின் அகமாகிய இல்லின் கண்ணே புகுந்து பழகி அறியும் முறைமையினையுடைய தூது.
முகம் புகல் முறைமை குறிப்பறிந்து பேசுந்தன்மை.
நெய்யணி நயந்த மகப் பெற்றெடுத்த புனிறுதீர மூழ்கி வீடு புகுந்த நிலையில் தலைவியை விரும்பின.