திருத்தல விளக்கம் 809

பொழிந்த அந்தவிடத்தைப் பிறரால் நிறுத்தலாகாத கண்டத்தில் நிறுத்தித் திருநீலகண்டர் ஆயினர். அருளைப்பெற்று மீண்டு எழுந்த விடத்தை இறைவனுக்காக்கிய பிழைதீரக் காஞ்சியில் சிவலிங்கம் தாபித்துத் திருமால் முதலானோர் தொழுது நீலமணியை ஒக்கும் கண்டம் உபகரித்த செய்ந் நன்றியை நினைந்து மணிகண்டேசர் என வழங்கினர். பின்பு கடலைக் கடைந்து அருளாற்பெற்ற அமுதத்தை அசுரரை வஞ்சித்துத் தேவர் உண்டு நோய் நீங்கி இறவாமையை எய்தினர். அமுதம் விடமும் போல அனைத்திலும் விரவி நிற்கும் இன்பம் தலைதூக்கித் துன்பம் தொலைய மணிகண்டேசர் வழிபடற் பாலர் ஆவர். இத்தலம் திருக்கச்சிநம்பி தெருவில் மணிகண்டேசர் ஆலயம் எனச் சிறப்புற்று விளங்கும்.

கோயிலின் உள்ளே மேற்புறத்தில், வாசுகி தன்னால் விடமெழுந்த குற்றம் தீரச் சிவலிங்கம் நிறுவி அனந்த தீர்த்தம் தொட்டுப் பண(பணம்- படம்)த்தில் உள்ள இரத்தின மணிகளால் பூசித்து உமையம்மை மணாளனார் திருமேனியில் அணிகலனாகும் பேறு பெற்றனன். மணிகண்டேசரை வணங்கி முத்தியை அடைந்தவர் அளப்பிலர்.

சத்ததானம் (ஏழிடம்):- முன்னாளில் அத்திரி, குச்சன், வசிட்டன், பிருகு, கௌதமர், காசிபர், அங்கிரா என்னும் முனிவர் எழுவரும் இமயமலையில் தவத்தால் பிரமனைக் கண்டு, பேரறிவாளர் பெறுதற் குரிய முத்தியை அறிவாற் குறைந்தவரும் பெறுதற் குபாயம் யாதென வினாவினர்.

பிரமன் அதற்கு விடைபகர்வான்: தருமம் ஒன்றே இறைவன் திருவுள்ளத்தை மகிழ்வித்து முத்தியை நல்குவிக்கும். அஃது இருவகைப்படும். ஒன்று சிவதருமம் எனவும் மற்றொன்று பசு தருமம் எனவும் படும். இவை முறையே சிவபுண்ணியம் பசு புண்ணியம் எனவும் கூறப்பெறும். உலக நல்வினையாகிய வேள்வி முதலியன தம்தம் பயன்களைக் கொடுத்து அழிந்துபோம். உணவு உண்ட அளவில் பசி தீர்ந்து பின் பசி உண்டாம். சிவ புண்ணியமோ பயனையும் கொடுக்கும் பின் மேன்மேற் செலவிற் கேதுவாய் அழியாது நின்று மெய்யறிவையும் விளைத்து முத்தியை நல்கும். எங்ஙனமெனின், அமிழ்தம் பிற உணவு போலன்றி உண்ட வழிப் பசி தீர்த்தலும் அல்லாமல் பின் பசி தோன்றாதவாறும் நிற்கும்.

அத்தகு சிவபுண்ணியம் ஆவன சிவலிங்கத்தைத் தாபித்துப் பூசித்தலும், சிவனடியாரை உண்டி முதலியவற்றால் உபசரித்தலும். இச் சிவபுண்ணியங்கள் இடவிசேடத்தால் சிவதலங்களிற் செய்வுழி ஏனைய இடத்தினும் பயன் கோடிஆக மிகும். அத்தலங்களினும் மிக்க காஞ்சியிற் செய்தால் பயன் எண்ணிலி கோடி ஆகும் எனத் தெருட்டினன்.

முனிவரர் நான்முகன் மொழிவழியே காஞ்சியை நண்ணிச் சிவகங்கையில் முழுகித் திருவேகம்பரைத் தொழுது மஞ்சள் நதிக்கரையில்