திருத்தல விளக்கம் 817

அரிசாப பயந்தீர்த்த தானம்: தேவரும் அசுரரும் போர் புரிகையில் தேவர்க்குத் துணையாக வந்த திருமால் அசுரரைத் தாக்கினர். புறங்கொடுத்தோடிய அசுரர் பிருகு முனிவரர் தம் மனைவியாகிய கியாதியைச் சரணடைந்தனர்.

அசுரர்க்கு இடங்கொடுத்து வீட்டு வாயிலில் காவலிருந்த கியாதியை பெண்ணென்றும் தனக்கு மாமியென்றும் எண்ணாது தலையை அறுத்தனர் திருமால். கூகூ என்னும் அரற்றுக் கேட்டு யோகம் கலைந்த பிருகு முனிவர் ‘திருமாலை நோக்கிப் பெரும் பாவத்திற்குப் பாத்திரமானவனே, ‘சைவ சமயமே ஏனைச் சமயங்களிற் றலையாய சமய மென்பதும், சிவபிரானையன்றி மற்றைத் தெய்வங்களை மறந்தும் புறந்தொழாத மாண்புடையேம் என்பதும் உண்மையேயாயின் பாவத்திற்கேதுவாகிய பிறப்புப் பத்தெடுத்து உழலுக எனவும், நின்றொண்டர் புறச்சமய நூல்வழி ஒழுகி ஏகதண்டம் திரிதண்டம் தாங்கித் திரிக’ எனவும் கடுஞ்சாபம் இட்டனர்.

பின்னர்ச் சுக்கிரன் துணைகொண்டு மனைவியை உயிர்பெறச்செய்த முனிவரர் தவவாழ்க்கையிற் றலைநின்றனர்.

திருமால் காஞ்சியை அடைந்து சிவகங்கையில் மூழ்கித் திருவேகம்பரைத் தொழுது பின்பு கச்சபேசத்திற்குக் கிழக்கில் அரிசாப பயந்தீர்த்த பிரானைத் தாபித்துப் பூசித்தவழிப் பெருமான் வெளிநின்று ‘எம்மால் தரப்படும் சாபம் எம் அடியவரால் விரும்பின் நீக்கப்படும். அவரால் தரப்படும் சாபமோ எம்மால் நீக்கப்படமாட்டாது’ என அடியவர் பெருமையை அறிவுறுத்தி அடையும் பத்துப் பிறப்புக்களையும் உலகிற்கு நலம் பயப்பனவாகவும், பிறப்பு ஐந்தனுள் மறக்கருணையும் ஐந்தனுள் மறக்கருணையும் காட்டி அருள்வதாகவும் அருள் செய்தனர் மேலும், திருமாலுக்கு வேண்டியவற்றை அருளி அவர் விருப்பப்படி வழிபடுவார்க்கு அருள் செய்ய ‘அவ்விலிங்கத்தே வீற்றிருப்பேம் என வழங்கித் திருவுருக் கரந்தனர். இத்தலம் நெல்லுக்காரத் தெருவில் உள்ளது.

திரிகாலஞானேசம்: இறப்பு நிகழ்வு எதிர்காலங்களின் நிகழ்ச்சிகளை ஒருங்கே அறிவான் முனிவரர் சிலர் சிவலிங்கம் நிறுவிப் போற்றி முக்கால ஞானத்தை அத் திரிகால ஞானேசராற் பெற்றனர். உருகும் அன்பர்க்கு அருள்செய்யும் தலமாகும். இது காஞ்சி நகரப் பேருந்து வண்டி நிலையமாகிய மதுராந் தோட்டத்தில் உள்ளது.

திருப்புகலூரில் முருகநாயனார் வழிபாடுசெய்த பூதபவிஷ்ய வர்த்தமான இலிங்கங்கள் திருஞானசம்பந்தர் திருப்பதிகம் பெற்றமை நினைவு கூர்க. பூதம்-இறப்பு. பவிஷியம்-எதிர்வு. வர்த்தமானம்-நிகழ்வு.