818 காஞ்சிப் புராணம்

மதங்கேசம்: ஐம்புலக் குறும்புகளை அடக்கவேண்டி மதங்க முனிவர் அருச்சித்த மதங்கேசர் கோயில் மதங்கேசர் தெரு மிஷன் மருத்துவமனைக் கெதிரில் மேற்கு நோக்கிய திருமுன்பொடும் விளங்குகின்றது. பல்லவர்காலச் சிற்பங்கள் அமைந்து அரசியலால் காக்கப்படுகிறது.

அபிராமேசம்: திருமால் இந்திரனுக்கு அருளுதற்பொருட்டுக் காசிபர் புதல்வராய் வாமனராகத் தோன்றி அபிராமேசரை நிறுவிப் போற்றி அருளைப்பெற்று மாவலி என்னும் அசுரர் தலைவன் வேள்விச் சாலையை அடுத்து மூன்றடி நிலம் அவனிடம் இரந்துபெற்றுத் தடுத்த சுக்கிரன் கண்ணைக் கெடுத்தனர். பின்பு, மாவலி ஆட்சியுட்பட்ட விண்ணையும் மண்ணையும் ஈரடி அளவையாற்கொண்டு மூன்றாமடிக்கு மாவலி தலையில் வைத்து அவனைப் பாதாலத்தழுத்தித் தேவர்கோன் துயரைத் தீர்த்தனர். மீண்டு வந்த திருமால் ‘வாமன குண்டம்’ என்னும் தீர்த்தம் தொட்டு நீராடி அபிராமேசரை வணங்கி உலகளந்த பேருரு (திருவிக்கிரமவடி)வை அவர்க்குக் காட்டி அருள்பெற்று ‘உலகளந்தபெருமாள்’ என்னும் திருப்பெயருடன் விளங்குகின்றனர். ‘அபிராமேசர்’ உலகளந்தார் வீதியில் சங்குபாணி விநாயகர்க்கு வலப்புறத்தே கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளனர்.

ஐராவதேசம்: நான்கு தந்தங்களையுடைய ஐராவதம் என்னும் வெள்ளையானை, சிவலிங்கம் நிறுவி ஐராவதேசர் என்னும் அப்பெருமானைப் பூசனை புரிந்து யானைகட்குத் தலைமையாகவும், இந்திரன் ஊர்தியாம் நிலைமையையும் பெற்றது. இத்தலம் இராஜவீதியும் நெல்லுக்காரத் தெருவும் கூடுமிடத்தில் மேற்கு நோக்கிய திருமுன்பொடும் விளங்குகின்றது.

மாண்டகன்னீசம்: அழகிய காதர் என்னும் பொருள் தரும் மாண்ட கன்னி முனிவர் ‘மாண்ட கன்னீசர்’ எனப் பெரிய சிவலிங்கம் நிறுவிப் போற்றித் திருவருள் வலத்தால் விண்ணுலகத்தில் வைத்து நுகரவேண்டிய தேவபோகத்தை இந்திரனு (போகியு)ம் நாணுமாறு இக்காஞ்சியில் ஐந்து அரம்பையரைக் கொணர்ந்து மணந்து நுகர்ந்து வாழ்ந்தனர். அவர் நாளும் நீராடிய நீர்நிலை ‘ஐயரம்பையர் தீர்த்தம்’ என்றாயது.

முனிவர் நெடுங்காலம் போகம் நுகர்ந்து உவர்த்து முடிவில் முத்தியைப் பெற்றனர்.

வன்னீசம்: (வன்னி-அக்கினி.) அக்கினிதேவன் தமையன்மார் மூவர் வேள்வி அவியைச் சுமக்கலாற்றாது இறந்தனர். அது கண்டஞ்சிய அக்கினி ஐயரம்பையர்த்தீர்த்தத்தைப் புகலடைந்து சகோதரனாக ஏற்றுக் காக்கவேண்டி அதனுள் மறைந்து கரந்தனன். தேவர் எங்கும் தேடி முடிவில் (ஒக்கப ்பிறந்தான் குளம்) சகோதர தீர்த்தக்கரையை