திருத்தல விளக்கம் 821

சிவபூசை, மகேசுரபூசை, விபூதி சாதனங்களில் உறுதியொடு தலைநின்ற அவ்வசுரர் முன்செல்லவும் மாட்டாவாய் அழிந்தன.

நெடிது சிந்தித்துத் திருமால் தன் கூற்றில் ஆதிபுத்தனைத் தோற்று வித்து நாரதனையும் உடன் போக்குவித்துத் திரிபுரத்து உள்ள தலைவர் மூவரொழிய ஏனைய அவுணரை முற்றவும் தாம் ஆக்கித் தந்த நூலால் மயக்கிச் சிவநெறியைக் கைவிடுத்தனர். பெண்டிரும் நாரதர் சொல் வலைப்பட்டுக் கற்பிழந்தனர்.

அந்நிலையில் திருமால் தேவரொடும் கயிலை புகுந்து சிவபிரானார் திருவடிகளில் விண்ணப்பிக்க அத்தேவர்களைத் தேராகவும் போர்க்குரிய கருவிகளாகவும் கொண்டுஅப்பெருமானார் திரிபுரத்தவருள் தலைவர் ஏனையோரையும் மூவரொழிய முப்புரங்களையும் சிரித்தெரித்தனர். திருமால் முதலானோர் சிவபூசனையையும் சிவசாதனங்களையும் கைவிட்டவர் என்றும் தமக்குப் பகைவரேயாவர் எனக் கூறித் தத்தம் இடம் சென்றனர்.

பலயுகங்கள் நரகிடைக் கிடந்தாலும் தீராக் கொடுஞ்செயலாகிய துர்ப்போதனை புரிந்தமைக்கு: வருந்திய புத்தனும் நாரதரும் சிவபுண்ணியத்தைச் செய்யத் தூண்டாது செய்வோரைப் பிறழ்வித்தமைக்குப் பெரிதும் வருந்திக் கழுவாய் இல்லாத குற்றம் தீரக் காஞ்சியை இருவரும் எய்தினர்.

புத்தநாரதரை வருத்தும் இருப்புக்குன்றத்தினும் பெரும்பாரமாகிய பாவச்சுமை காஞ்சியை நெருங்குகையில் பருத்திக்குன்றினும் மெலிதாய் விட்டமை நோக்கி அவ்விடத்திற்குப் ‘பருத்திக்குன்றம்’ எனப் பெயரிட்டனர்.

அதற்கு வடகிழக்கில் அதிவிசித்திரச் சிற்பக் கோயிலை இருவருமாக அமைத்து, கயிலாயநாதரை எழுந்தருளுவித்துப் பூசனை புரிந்து தவம் இயற்றினர் இருவரும். சிவபெருமான் வெளிநின்று ‘பிறர் நலம் பெற ஓரோர்கால் பாவம் சிறிது செய்யலாமெனினும் சிவாபராதமாகிய செயல் நினைப்பினும் அதனைப் போக்கப் பல்லூழிகாலம் நரகிடைக் கிடந்தாலும் உய்தியில்லை. அத்தகு பாவமும் காஞ்சியை அடுத்தமையால் பெரிதும் நீங்கிற்றாயினும் பல் பிறப்பெடுத்து அநுபவித்தே கழிக்க வேண்டியுள்ளது. ஆகலின், அப்பிறப்புக்களைக் கழிக்குமாறு கூறுதும் கேண்மினென’ அருளினர்.

‘இக்கயிலாயநாதரை வலம் செய்யப்புகும் இடத்தும், வெளிவரும் இடத்தும் வழியைச் சுருங்கையாக அமைத்தோம்’ இவ்வழிகளால் வலங்கொள்ளும் முகத்தால் பல்யோனியிற் புக்குழலும் பிறப்பு இறப்புக்கள் நுமக்குக் கழிவனவாகுக. முடிவில் முத்தியை வழங்குவோம்’ என வாய் மலர்ந்து பெருமானார் திருவுருக்கரந்தனர்.

புத்தனும் நாரதரும் அங்ஙனமே நெடுங்காலம் இறைவனை வலம் வருவோராய்த் திருவருளைப் பெற்றனர். கயிலையை ஒக்கும் இத்தலம் ஒப்பது மூவுலகினும் இல்லை.