x

இரண்டாம் பகுதியின் முன்னுரை

இப்புராண உரை வெளியீட்டின் முதற் சஞ்சிகை 5-6-1935 ஸ்ரீசேக்கிழார் திருநாளன்று திருத்தில்லையில் ஆயிரக்கால் மண்டபத்தில் வைத்து வெளியிடப்பெற்றது. திருமலைச் சருக்கம் - தில்லைவாழந்தணர் சருக்கம் சேர்ந்த முதற்பகுதி (l.Vol.) 15-9-1937-ல் நிறைவேறி வெளிவந்தது. இலைமலிந்தசருக்கம் மும்மையாலுலகாண்ட சருக்கம் சேர்ந்த இரண்டாம் பகுதி (ll.Vol.) இப்போது வெளியிடப் பெறுகின்றது. இத்தனை காலத்தாழ்வு நேர்வதுபற்றிப் பல அன்பர்கள் கவன்று என்னிடம் தெரிவித்துள்ளார்கள். எனது "முகவுரைக்கு முன்னுரை"யில் மூன்று முறை பன்னிரண்டாண்டு எல்லைகளைப்பற்றிக் குறித்துள்ளதைக் கண்ணுற்ற அரிய நண்பர் ஒருவர் இதுவும் அவ்வாறே யாகமலிருக்கவேண்டுமே என்றஞ்சினர்; விரைந்து பணிசெய்யுமாறு வேண்டினர். அன்பர்களைவிட எனக்குக் கவலை அதிகந்தான். ஆயினும் என் செய்வேன்? எனக்கியல்பாயுள்ள மந்தகுணம் என்னை விட்டு எவ்வாறு நீங்கும்? அன்பர்கள் தமது பெருங்குண நிறைவினால் என்னை எனது குற்றங் குறைபாடுகளுடன்தான் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். எனது அறிவு ஆற்றல்களின் குறைவு ஒருபுறமிருக்க இவ்வெளிவீட்டுக்கு நேரும் பிற இடையூறுகள் மிகப்பலவாம். நமது பண்டைப் பழஞ்சைவத் தென்றமிழ் நாட்டில் இவ்வெளியீட்டுக்கு உரிய ஆதரவில்லாமை ஒரு பெருங்குறையும் இடையூறுமாகும் என்பது அன்பர்கள் பலரும் அறிவார்கள். ஆயினும் இரண்டாம் பகுதி வெளியிடும் இடையில் திருப்பனந்தாள் காசிமடம் அதிபர் ஸ்ரீமத் - காசிவாசி -சுவாமிநாதத்தம்பிரான் சுவாமிகள் ஆசிகூறி நன்கொடையாக ரூ. 100 அளித்தார்கள். கோவைச் சைவப்பெரியார் வக்கீல் திரு. B. வேங்கடாசல முதலியார், B.A., B.L.D அவர்கள் அன்புடன் ஆசிகூறி ரூ. 100 நன்கொடை தந்தனர். இவைபற்றி முன்னரே எனது நன்றியை 8-வது சஞ்சிகை அறிவிப்பில் தெரிவித்துள்ளேன். சஞ்சிகைகள் வெளிவந்தவுடன் பொருட்பேறுள்ள அன்பர்கள் பற்பல பிரதிகளை விலைக்குப்பெற்றுப் பரவச்செய்ய முன்வருவார்களானால் நன்கொடைகளைவிட, அதுவே இவ்வெளியீட்டுக்குச் செய்யும் பேருதவியாகும் என்று கருதுவேன். பள்ளிக்கூடங்கள், சங்கங்கள் புத்தகசாலைகள், முதலிய தாபனங்களுக்குரியவர்கள் எல்லாரும் ஒவ்வொரு பிரதியேனும் பெறுவதானால் அச்சிடும் பிரதிகள் போதா. சிவாலயங்களின் புத்தகசாலைகளில் எல்லாம் இப்புராணஉரை வைக்கத்தகுந்ததாகும் என்பேன். முற்பகுதியிலிருந்ததைவிட அதிக ஆர்வத்துடன் இலங்கையன்பர்களின் ஆதரவு பெருகிவருகின்றதனை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். (இலங்கை) யாழ்ப்பாணம் - இந்துக் கல்லூரி, ஆசிரியர், பேரன்பர் திரு. மு. மயில்வாகனம் அவர்கள் இப்புத்தகங்களையும் எனது பிற நூல்களையும் அங்குவைத்து விற்றுக்கொடுத்தும், இன்னும் பலவகையாலும் இவ்வெளியீட்டுக்குப் பேருதவிபுரிந்தும் வருகின்றதுபற்றி எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த இரண்டாம்பகுதி அச்சிடுங் காலத்தினிடையில் அச்சுக்கூடத்தில் அச்சுக்கள் புதுக்கி வார்க்கநேர்ந்தது. ஈசுவர ஆண்டு மாசிமதி ஏழாம்நாள் (18-2-1938) திருக்கடவூரில் அடியேனுக்கு அறுபதாம் ஆண்டு நிறைவுக்குரிய வழிபாடு