5

சிவப்பிரம்மஸ்ரீ. ஜி. சிவசுப்ரமண்யக் குருக்கள் அவர்கள்
காரியதரிசி, சொர்ணாம்பிகா சைவ சித்தாந்த சபை, சேலம்

ஆசியுரை

கோவையம் பதியிற் பேரூர்க் கோநட ராசன் கோயிற்
சேவைசெய் தடிப ணிந்த செந்தமிழ்க் கந்த சாமிப்
பூவையின் வயிற்று தித்த புதல்வனற் சுப்ர மண்யன்
சேவையர் சேக்கி ழாரின் திருமுறைக் குரைசொற் றானால்.
 

உரைநடைப் பொருட்க ருத்தின் உண்மையை விளக்கு மிந்நூல்
திரைகடல் சூழ வெங்குஞ் சிறப்புற விளங்கப் பெம்மான்
நரைபிணி மயக்க றுத்து நன்மனம் பொலிய வன்னோன்
கரையிலாப் புவியி னென்றுங் கனிவுரை நிகழ்த்தி வாழ்க.

நம் கிளிவனநாதன் ஆதிரைத் திருநடங் கண்டபோழ்து மலர் சிலம்படி
தாழ்த்தி - வணங்கிப் - பெற்ற திருவருட்டிருநீறு இத்துடன் அனுப்பப்
பெற்றுளது. அணிந்து அமலன் அருளால் விரைவிற் "பெரியபுராண உரை
வெளியீட்டுப் பணி" நிறைவேற்றிப் பேரானந்தப் பெருவாழ்வு அருளி
அன்பின்வழி நிற்பீர் ஆகுக.

  உரைச் சிறப்பு - வரிசை 149-வது சுந்தரமூர்த்தி சுவாமியின்
திருஅவதாரச் செய்யுளுக்கு உரை கண்டருளும்போது ஆதிசைவ மரபின்
பெருமையையும் நிலைமையையும் குறிப்பிட்டு எங்கள் சமூகத்திற்கே
ஊக்கத்தையும், அன்பர்கள் பலர்க்கும் ஆதிசைவரிடத்துப் பற்றும் கருணையும்
நிரம்பும் ஏதுவையும் உதவியது போல அனேக நல்லறிவுச் சுடரொளிகள்
இவ்வுரையில் வீசுகின்றன. வரிசை 407-வது செய்யுளில் இயற்பகைக்கு அருள்
புரிந்தவிடத்து ‘அம்மையார் திரோத சத்தியாய் நின்று அருட்சத்தியின்
தொழிலியற்றினர்' எனும் சிவாகமக் கருத்து நுமது பேருரையில் மிளிர்வது
கண்டு மகிழ்ந்தனன். பற்பல விசேட உரைகளும் இதில் இலங்குகின்றன.
காலத்திற்கேற்ப மக்களின் ஐயம் நீக்கி நல்லுணர்வு தரும் பொன்மொழிகள்
நிறைந்து திகழ்கின்றன.

ஆசி - இவ்வரிய உரை நூலை உலகிற்கு உதவிவரும்
பெருந்தகைமைக்கு எம்மாலாய உதவி இறைவன் எங்குருநாதன்
ஞானஸ்கந்தன் திருவடியினைபற்றித் தங்கட்கு நிறையாயுளும், நோயற்ற
வாழ்வும், தளரா நன்மனமும், மறவா அன்பும் நிறைந்து தாங்கள் நீடூழி வாழ
நல்லாசி பகர்ந்தனம்.

வேண்டுகோள் - நமது ஆதிசைவ மரபினர் அனைவரும் இவ்வுரை
நூலைப் பெற்று வாசிப்பதால் தமிழ் - திருமுறை - சித்தாந்தம் - வேதாகம
நுண்பொருள் முதலியவைகளைச் சுலபமாக அறிந்துகொள்ள இவ்வுரை ஓர்
திறவுகோலாக உதவும். ஆதலின் ஒவ்வொருவரும் இவ்வுரைநூலைப் பெற்றுக்
கற்றுணர்ந்து ஆர்வமிகு மன்பினராய் முப்போதும் அர்ச்சித்து ஆலாலசுந்தரர்,
நம்பியாண்டார் நம்பி, அருணந்திசிவம், முதலிய நமது பரமாசாரியர்களின்
அருளைக் கடைப்பிடித்து உய்ய வேண்டுகின்றேன். சிவாலய
தருமபரிபாலகர்கள் தங்கள் பார்வையில் வாங்கிவைத்தும், பாராயணம்
செய்வித்தும், பூசித்தும், ஆலய தத்துவங்களை அன்பர்களுக்கு உணர்த்தி
வைக்க முன்வருவார்களென்றும் கோருகிறேன். பல வழிகளிலும் இவ்வுரை
நூலைப் பரவச் செய்வது சைவர்களது கடமை.