73


சிவமயம்

திருச்சிற்றம்பலம்

திருத்தொண்டர்புராண

வரலாற்றுச் சுருக்கமும்

ஆசிரியர் சேக்கிழார்சுவாமிகளது


சரித ஆராய்ச்சிக் குறிப்புக்களும்

உலகிலே எல்லாவுயிர்களுக்கும் கருணைத்தாயாகியவர் உமை
அம்மையார். அவ்வுயிர்கள் எவைகட்கும் போக மோட்சங்களைத்
தரும்பொருட்டு அவர் இறைவனைத் தழுவுதற்குத் தவம்புரிந்தனர்.
அதற்குரிய இடமாகப் பெற்றது தொண்டை நன்னாடு. பாலாறு பெருகி
இதற்கு எல்லா வளங்களையும் தருகின்றது. இந்நாடு, குறிஞ்சி, முல்லை,
மருதம், நெய்தல் என்ற நானிலப்பகுதிகளையும் இவற்றின் புணர்ப்பாலாகிய
நிலப்பகுதிகளையும் சிறக்க உடையது. இந்நிலப்பகுதிகள் ஒவ்வொன்றும்
சிவத்தலங்களிற் சிறந்தனவற்றைத் தம்முட்கொண்டு விளங்கும்
பெருமையுடையன.

    இந்நாட்டிலே கரிகாற்பெருவளப் பெருஞ்சோழர் பற்பல நாட்டினும்
தெரிந்துகொண்ட நற்குடி நாற்பத்தெண்ணாயிரத்து வேளாண் மக்களைக்
குடியேற்றினர். ஒழுக்கத்தினும் வாய்மையினும் சிறந்த குடிகளால் நிரம்பப்
பெற்றதால் “தெண்ணீர் வயற்றொண்டை நன்னாடு சான்றோருடைத்து“
எனப் பாராட்டப்பெற்றது இந்நாடேயாம்.

     இந்நாட்டின் இருபத்துநான்கு கோட்டங்களிற் சிறந்து விளங்குவது
புலியூர்க்கோட்டம். அதில் உள்ள நாடு பலவற்றினும் சிறந்தது குன்றத்தூர்
நாடு. அதனுட் சிறந்து விளங்குவது குன்றத்தூர். அவ்வூரில்
வேளாண்குடிமரபிலே சேக்கிழார்குடி பெருமைபெற்று வாழ்ந்தது.
அக்குடிசெய்த பெருந்தவப்பயனாய் அருண்மொழித் தேவரும், அவர்
தம்பியாராகிய பாலறாவாயரும் அவதரித்து வாழ்ந்தனர்.

காமாட்சியம்மையாரிடம் இருநாழிநெல்பெற்று அதனை
உழவுத்தொழிலாற் பெருக்கி உலகமெல்லாமுண்டு வாழும்படி அறம்
வளர்க்கும் வேளாளர் குலம் மிகப் புகழ்பெற்றதாம். ஒரு வணிகனுக்குத்
தாம் சொன்னசொல்லைக் காக்க எழுபதுபேர் வேளாளர்கள் முன்னாளில்
தீப்பாய்ந்து வாய்மை காத்த திருவாலங்காட்டுப் பழயனூர்ச் சரிதம்
ஆளுடைய பிள்ளையாராலும் புகழப்பட்டதென்றால், வேறு நாம் புகழ்வது
என்னை? அறுபத்து மூன்று நாயன்மார்களிலே பதின்மூவர்
வேளாளர்களாவார். இத்தகைய விழுக்குலத்திலே சிறந்த விழுக்குடியிலே
அவதரித்து விழுத்தகைமையானும் அறிவானும் மேம்பட்டு விளங்கிய
அருண்மொழித்தேவர் பெருமையை அக்காலத்துச் சோழநாட்டையாண்ட
குலோத்துங்கச் சோழர் என்ற அரசர் கேட்டு அவருக்கு உத்தமசோழப்
பல்லவன் என்ற பட்டமுந் தந்து அவரைத் தமது முதன் மந்திரியாக
அமைத்துக் கொண்டார். அவ்வாறே அவரும் அமைச்சர் தொழில்பூண்டு
அரசாங்கத்தைத் திறம்பெற நடத்தி வந்தார். அந்நாளில் அருண்மொழித்
தேவர் திருநாகேச்சரத்தில் எழுந்தருளியுள்ள இறைவனிடத்து மிக்க அன்பு
செலுத்தி அவரையே தமது ஆன்மார்த்தநாயகராகக் கொண்டு வழிபட்டு
வந்து, அத்திருக்கோயிலிற் பற்பல திருப்பணிகள் செய்தனர். அங்கு
நடேசப்பெருமான் எழுந்தருளியிருக்கும் கனகசபையையும் அதன் முன்புறம்
மண்டபத்தையும் புதிதாய் அமைத்துத் திருப்பணிசெய்தனர். தமது ஊராகிய
குன்றத்தூரிலே தமக்குக் கிராமப்புலத்திலே இருந்த மனைக்கட்டு