76

அவர் பாதத் திருச்சிலம்பி னொலியும் உடனே எழுந்தது. அரசர் அதுகேட்டு
உளங்கசிந்து உருகி மகிழ்ந்தனர். “இத்திருக் கதையினை
விரித்துக்கேட்கயாவரும் வருக“ என்று எல்லாத் திக்குக்களிலும் அரசர் ஓலை
போக்கினர். அவ்வாறே சிவ சமயத்தவர் யாவரும் யாங்கணுமிருந்தும் வந்து
திரண்டார்கள். நகர முழுவதும் அலங்கரித்தனர். திருவீதிகளிற் றோரண
முதலியன கட்டி அழகு செய்து புதுக்கினார்கள். நடராசர் நடஞ்செய்யும்
கனகசபைத் திருமுன்றிலிற் கோமயத்தால் மெழுகி, அறுகாற் பீடமிட்டு,
அதன்மேற் பசும்பட்டு விரித்து, மேலே வெண்பட்டு மடித்து இட்டுப்,
புதுமலர்கள் தூவி, நறுந்தூப தீபங் கொடுத்துச், சிவாகம விதிப்படி ஆசனங்
கற்பித்தனர். அதன்மேற் றெள்ளுதமிழ்ச் சேக்கிழார் செய்த புராணத்
திருமுறையை வைத்து இறைஞ்சிப் போற்றினர். “இப்புராணத்தை நீரே
வாசித்துப் பொருள் அருளிச் செய்வீர்“ என்று யாவரும் கேட்கக் குன்றை
முனிவரும் அவ்வாறே சொல்ல விசைந்தனர். சிவபெருமானுக்கிசைந்த
பேர்வழியின்னாளும், ஆளுடைய பிள்ளையார் அவதரித்த நாளும், அவர்
அழுது ஞானமுண்டருளிய நாளும் ஆகிய திருவாதிரை நாளிலே
சித்திரையிற்றொடங்கி அடுத்த சித்திரைத் திருவாதிரையிலே
முடிப்போமென்று கொண்டு சேக்கிழார்பெருமான் நடத்த ஆயிரக்கான்
மண்டபத்தில் அனைவரும் நாடோறுமிருந்து கேட்டனர். மூவர் முதலிகள்
அருளிய திருநெறித் தமிழாகிய தேவாரமும், திருமூலர் அருளிய
திருமந்திரமாலையும், அம்மையார் அருளிய திருவிரட்டை மணிமாலை,
அற்புதத்திருவந்தாதி, மூத்ததிருப்பதிகம் என்றிவைகளும், கழறிற்றறிவார்
நாயனாரருளிய பொன்வண்ணத்தந்தாதி, ஞானவுலா, திருமும்மணிக் கோவை
என்றிவையும், ஐயடிகள்காடவர்கோ னாயனாரருளிய திருவெண்பாவும் ஆகிய
இவற்றைத் தனது உறுப்பாகவும், திருவிருத்தப்பாவினத்தை உடலாகவும்,
பொருள்கோள் உயிராகவும் கொண்டு, நாலடியால் “உலகெலாம்“ என்ற
புராணம் உலகெலாம் நடந்தது. புராணம் சொல்லத் தொடங்கிய நாள்
முதலாக நாடோறும் வந்து கேட்ட எல்லா அடியவர்களுக்கும் உறையுள்,
உணவு முதலிய எல்லா உபசாரங்களையும் அரசர் ஏவலின்படி அமைச்சர்கள்
நடத்தினர். நடராசருக்கு மகாபூசை நடத்தினர். தில்லைவாழந்தணர்
கட்கெல்லாம் வெவ்வேறாக அமுதுபடி முதலான வெல்லா நடத்தினர்.
இவ்வாறு திருத்தில்லை சிவலோகம் போலப் பொலிந்து தோன்றிற்று.
திருமுறையைப் பலபேர் எழுதுவர்; பல பேர் வாசிப்பர்; பல பேர்
பொருளுரைப்பர்; பலர் சிரமசைத்துக் கொண்டாடுவர்; பலர் சிரிப்பார்;
களிப்பார், தேனிப்பார்; வேறு பலர் குன்றை முனிவர் செய்த அருந்தவப்
பயனை எண்ணி எண்ணி மகிழ்வார்; மற்றும் பலர் அம்பலவர் அருளினை
மகிழ்வர்; பற்பலரும் “இதுகேட்ட சோழர் செவிக்கு இனிச் சிந்தாமணிப்
புரட்டுப்பிடிக்குமோ“ என்பர். இவ்வாறு அன்பர்கள் பாராட்ட அடுத்தவாண்டு
சித்திரைத் திருவாதிரை நாளில் புராணம் படித்து முடித்தனர் சேக்கிழார்
பெருமான். அன்பர் முழக்கிய அரவொலி கடலினு மிக்குமுழங்கியது.
திருத்தொண்டர் புராணம் எழுதிய திருமுறையை மறையோர் சிவ மூல
மந்திரத்தால் அருச்சனை செய்து இறைஞ்சினர். வேதத்தோ டொப்ப இதுவும்
ஒரு தமிழ்வேதமேயாம் என்று தூபதீப நிவேதனம் முதலிய உபசாரங்களுடன்
பூசித்தனர். பின்பு அரசர் யானைச் சிரத்தில் ஏற்றிவைத்து, அதனை யடுத்துச்
சேக்கிழார் பெருமானையும் ஏற்றினர். அரசருங்கூட ஏறிப் பின்புறம் அமர்ந்து
தமது இரண்டு கரங்களினாலும் இரண்டு வெண்சாமரைகளை வீசினர்.
தேவர்கள் பூமழை பொழிந்தனர். இவ்வாறு திருவீதி வலம் வந்தபோது
அரசர் மனமிக மகிழ்ந்து “இதுவன்றோ நான் செய்த தவப் பயன்“ என்று
மகிழ்ந்தனர். வீதிகள்தோறும் வாழைகட்டித்