86

22-23. ஐயர் அதிபத்தர் - ஐயராகிய அதிபத்தர். இவரது குலம்
பரதவர் - மீன் வலைஞர் - என்ற தாழ்ந்த குலமேயாயினும் இவர். ஐயரே -
பெருமையிற் சிறந்தோரேயாம் என்றது குறிப்பு. திருநாளைப்போவாரைத்
தில்லைவாழந்தணர்கள் “ஐயரே“ - (திருநாளை - புரா - 30) என்றதும்,
திருநீலகண்ட யாழ்ப்பாணரை ஆளுடையபிள்ளையார் “ஐயர்நீர்“
(திருஞான - புரா - 133 - 451) என்றதும் முதலிய ஆட்சிகள் காண்க.

23. பகர் சத்தி - அன்பரை இகழ்ந்த நாவினை அரியும்
சத்தியுடையார் என்று எவரும் பகரும் சத்தியார் என்ற குறப்பு. அன்பரே
“இகழ்ந் தியம்பும் முரை வைத்த நாவை வலித்தரி சத்தியாற்
சத்தியாரெனும்“ - (சத்தி - புரா - 3) என்றது புராணம்.

24. கைத்தபுலன் ஐயடிகள் காடவர்கோன் - புலன் கைத்த என
மாற்றுக. கைத்த - கசந்த - வெறுத்த. தமது அரசாட்சியை இன்னலென
இகழ்ந்து வெறுத்து ஒதுக்கியவர்; யாக்கை நிலையாதென்பதையும், யாக்கை
விரைந்து அழிந்துபோவதன் முன்னே அரன் பணிசெய்து அவன்
தலந்தோறுஞ் சென்று அவனை யடையவேண்டுமென்பதையும் வலியுறுத்தி
ஐம்புல வின்பங்களையும் கைக்குமாறு உலகர்க் கறிவுறுத்தும்
க்ஷேத்திரவெண்பாப் பாடினர்; பேரரசரானதாமும் ஐம்புலன்களையும்
கைத்துத், தமது முடிதுறந்து, சிவதலந்தோறும் சென்று, பாடிச், சிவனடி
பெற்றனர் என்பனவாதி குறிப்புக்கள் பெறக் கைத்தபுலன் என்றார்.

24. மொய்த்த கணம்புல்லனார் - மொய்த்த மொய்த்தல் -
தொகுத்தல் - கூட்டுதல். தொகுதியாய் அரிந்து கட்டிய கணம்புல்லினால்
தம் வாழ்வு நடத்தியவர்; முறை யாமங் குறையாமல் இறைவன் சந்நிதியில்
விளக்கெரிக்கக் கணம் புல்லுப் போதாமையாலே தமது திருமுடியினையே
அதற்கீடாகக் கூட்டியவர் என்பது குறிப்பு.

25. புகழ் வாயிலார் - அகமலர்ந்த அர்ச்சனையில் அண்ணலார்
தமைநாளும் அன்பினாற் புகழ்ந்து நிறைவழிபாடுசெய்த புகழினையுடையார்.

26. நல்ல முனையடுவார் - தமது உதவிக்கீடாக நிதிபெற்றுச்
சென்று, நள்ளார் முனையெறிகின்ற அதனையும் நடுவுநிலை வைத்துச்,
சீர்தூக்கிக், கூலியேற்றுச் சென்று வென்றாராதலானும், அவ்வாறு பெற்ற
நிதியத்தை ஈசனடியார்க் காக்கினாராதலானும் நல்ல என்றார்.

26. மல்கு கழற்சிங்கர் - மல்குதல் - நிறைதல். தமது பட்டமு
மணிந்து காதல் பயில்பெருந் தேவிபால் வைத்த அன்பினும் இறைவன்
பணியில் அதிகம் பற்றி மல்கியவர் என்ற குறிப்பும், மலர் மோந்த மூக்கின்
முன்னே பூவைத் தொட்டு முன் எடுத்தகையாம் முற்படத் துணிப்பதென்ற
நீதி உறைப்பும் மல்கியவர் என்ற குறிப்பும் பெற மல்கு என்றார்.

28. கொங்கார் - கொங்கு - வாசனை - இருந்தவிடத்தன்றி
நெடுந்தூரம் சென்று பரவி வீசும் புகழினையும் குறிக்கும். நித்தல் ஒரு
படிக்காசு இறைவனிடம் பெற்ற திரு அருண் மணமும், அதனால் பரவிய
அவரது புகழ் மணமும் குறித்தது.

30. சித்தம் சிவன்பாலே சேர்ந்துள்ளார், நித்தமு, முத்திநெறி காட்டும்
முதல்வர் முழுதுணர்ந்தோர் என்றது, தாம் சித்தத்தைச் சிவன்பாலே வைத்த
அதனால் சிவத்தடைந்து, அடித்தொண்டின் வழியடைந்தார். அதுவே முத்தி
பெறும் நெறியாவதென்று உலகுக்குக் காட்டுகின்ற முதன்மையார். இவர்களே
முழு உண்மையும் உணர்ந்தவர்களாவார். பிரமன் முதலிய காரணபங்கய
மைந்தின் கடவுளர் பதமுங் கடந்து, அதன் மேலையதாகிய பூரண
மெய்ப்பரஞ்சோதி பொலிந்து விளங்கும் நாதாந்தத் தாரணையாலே சிவத்தை
யடைந்து சிவாநு போகம் பெற்று நிற்பவர்களாதலால் அந்நிறைவினுள் நின்று
முழுதுணர்ந்தோராவார்.