இது ஒரு பெரும்பேறாகும்.
மற்றொன்றாவது விக்கிரம ஆண்டு அற்பிசித்
திங்கள் 26-ம் நாள் (11-11-1940) திங்கட்கிழமை மேலைச்சிதம்பரம் என்னும்
திருப்பேரூரில் சிறப்பாக நடைபெற்ற அறுபத்து மூன்று நாயன்மார்களின்
அட்டபந்தன மகாகும்பாபிடேகத்தின்போது அடியேனுக்கும் மற்றும்
கோவைச் சேக்கிழார் திருக்கூட்டத்தாருக்கும் திருப்பணி செய்யக் கிடைத்த
பெரும்பேறாகும்.
இப்பகுதியில்
வரும்படங்களுள் திருநாளைப்போவார் நாயனார்,
மானக்கஞ்சாற நாயனார், அரிவாட்டாயநாயனார், உருத்திரபசுபதிநாயனார்
புராணங்களின் சம்பந்தமாகிய பலவற்றையும் பல இன்னல்களுக்கிடையில்
பலமுறையும் தாமே நேரில் போய்ப் படம் பிடித்து உதவியவர் கும்பகோணம்
திரு. சாட்சிலிங்கம் அவர்களாவார். ஆனாயநாயனார்
புராணத்திற்குரிய
படங்களை உதவியவர் திருமங்கலத்திருக்கோயில் தருமகர்த்தர் திரு.
அரங்கசாமி ஐயர் B.A. அவர்கள். மதுரையில்
மூர்த்திநாயனார் புராண
சம்பந்தமான படங்கள் எடுத்துக்கொள்ள அன்போடு அனுமதி தந்து பல
வுதவிகளும் செய்தவர்கள் திருவாலவாய்க் கோயில் நிர்வாக அதிகாரி திரு.
R. S. நாயுடு, (Bar-at-law) அவர்கள். திருப்பனந்தாள் - திருப்புகலூர்
-
திருச்சேய்ஞலூர் - திருவாப்பாடி - முதலிய படங்கள் எடுத்து உதவியவர்கள்
மாயவரம் நகரசபை நிர்வாக உத்தியோகத்தர் திரு. S.
முத்துராமலிங்க
முதலியார் அவர்களும், திரு. T. S. மீனாட்சிசுந்தர
முதலியார், B.A.
(தஞ்சாவூர் ஜில்லாப் பஞ்சாயத்து உத்தியோகத்தர்) அவர்களுமாவர்.
கண்ணப்பநாயனார் புராணப் படங்களை எடுத்து உதவியவர் எனது
உழுவலன்பர் திரு. K. ஆறுமுகநாயனார். அவர்கள்
இவ்வெளியீட்டுக்குப்
பல்லாறறானும் பேருதவி புரிந்து வருகின்றார்கள். அவர்கள் எல்லார்க்கும்
எனது நன்றி உரியது.
முதற்பகுதி
முன்னுரையிற் குறித்த ஏட்டுப்பிரதிகளுள் திருவாவடுதுறைப்
பிரதிகளை உதவியவர் அன்பர் திருவாவடுதுறை - திரு. சுப்பு செட்டியார்
ஆவர். இவர்கள் திருவாவடுதுறை ஆதீனத்துப் பழ அடியார் கூட்டத்தைச்
சார்ந்த பேரன்பர். ஏட்டுப் பிரதிகளிரண்டு தந்துதவியதுடன் பலவகையாலும்
ஊக்க மளித்து வருகின்றார்கள். இவர்களது பெயர் முன்னர்க் குறியாது
விட்டது எனது பிழை.
தேவாரத்
திருமுறைகளையும் பெரிய புராணத்தையும், உலகுக்கு
பகரிக்க மூலகாரணமானது திருநாரையூர்ப் பொல்லாப்பிள்ளையாரது
திருவருளாகும். ஆதலின் இவ்வெளியீட்டின் ஒவ்வோர் பகுதியின்
முகப்பிலும் திருநாரையூர் பற்றிய படம் ஒவ்வொன்று பொறிக்க எண்ணி,
முதற்பகுதியில் பிள்ளையாரது கோயில் அமைக்கப்பட்டது. இப்பகுதியில்
ஸ்ரீ பொல்லாப்பிள்ளையாரது திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது. அதனையும்
தில்லை ஒம குளத்தையும் படம் எடுத்துதவியவர் அக்கோயில் பரம்பரை
தருமகருத்தரும் கிராம பெரியதனக்காரரும் மிராசுதாரரும் சிவகதாப் பிரசங்க
வல்லவருமாகிய அன்பர் திரு. ரா. முத்துக்குமார பிள்ளை அவர்கள். மிகுந்த
சிரமப்பட்டு இப்படங்களை எடுத்துதவியதுடன் அவற்றைப் பொறித்து
அச்சிட்டுத் தரும்வரைத் தமது பொறுப்பாக ஏற்றுக்கொண்டனர். அவர்களது
அன்புக்கு நன்றி செலுத்துகிறேன்.
இப்புராண
உரை வெளியீட்டுத் திருப்பணியை மதித்துச் சென்னை
மாகாணத் தமிழ்ச் சங்கத்தார் அடியேனுக்குச் "சிவக்கவிமணி"
என்றதொரு
பட்டத்தை நேற்றுச் சென்னைச் சிந்தாதிரிப்பேட்டை உயர்பள்ளி
மண்டபத்திற்கூடிய தமிழ்ப் புலவர் மகாநாட்டின் முன்பு அளித்தனர்.
அவர்கள் அன்புக்கு என் நன்றி உரியது. |