மூன்றாம் பகுதி - முதற்பாகத்தின் முன்னுரை (திருநாவுக்கரசு நாயனார் புராணம்) இவ்வுரை வெளியீட்டில் முன்னுரை எழுதுவது ஒரு சிரமமான காரியம். இரண்டு முன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அது என்மேல் வந்து நிற்கின்றது. இவ்வுரை வெளியீடு 1935-ம் ஆண்டில் தொடங்கி முதற்பகுதி இரண்டரை ஆண்டுகளில் (15-9-1937) வெளியாயிற்று. அப்போது இவ்வெளியீட்டின் புராண உரை முழுமையும் பற்றி முகவுரை எழுதவேண்டிய பொறுப்பு என்மேலதாகவும், அதனைப் பின்ர்த் திருவருள் வழியே உரை முற்றுப்பெறும்போது செய்யும்படி வைத்து, "முகவுரைக்கு முன்னுரை" என்ற மட்டில் ஒன்று எழுதி வெளியிட்டேன். அதன்பின் மூன்று ஆண்டுகளின் பின் (25-12-1940) இரண்டாம்பகுதி வெளியாயிற்று. அப்போது அதன் மட்டில் ஒரு முன்னுரை எழுதி வெளியிட நேர்ந்தது. இப்போது அதன்பின், இரண்டரை ஆண்டுகளுக்குமேல் சென்றன. 6.9.1943-ல் மூன்றாம் பகுதியின் முதற் பாகமாகத் திருநாவுக்கரசு நாயனார் புராணம் மட்டும் வெளியிட்டு அரங்கேற்ற விழாவும் நடந்தது. ஆதலின் இப்பகுதிக்கும் ஏற்றவாறு ஒருமுன்னுரை எழுதுவது என் பொறுப்பாயிற்று - என்ற இந்தமட்டில் அமைந்துவிடினும் சாலும். அதுவே இடைப்பட்ட வரலாற்று நிலை முழுதும் சுருக்கி விளக்கும். ஆயினும் கடமை பற்றிச் சில கூறுகின்றேன். ஆயின் அடுத்த முன்னுரை விரைவில் எழுத நேரும் என்றும், மூன்றாம் பகுதியின் இரண்டாம் பாகம் வெளிவந்து அதனுடன் திருநின்ற சருக்கமும் பெரிய புராண முதற் காண்டமும் உரையுடன் வெளிவரக் காணும்பேறு பெறத் திருவருள் விரைவில் கூட்டுவிக்குமென்றும் நம்புகின்றேன். 2. நன்றியுரை புராண உரைத் தொடக்கத்தில் திருக்கயிலாய பரம்பரை திருத்தருமபுர ஆதீனம் 24-ம் பட்டமாக எழுந்தருளியிருக்கும் ஸ்ரீலஸ்ரீ ஷண்முகதேசிக பண்டார சந்நிதிகளை, முதன்முறையாக, நான், நளனுக்குக் கலிநீங்கிய தலமாகிய திருநள்ளாற்றில் தரிசித்துப் புராண உரையினைப்பற்றி விண்ணப்பித்து அவர்களது அருளாசியை வேண்டிக்கொண்டேன். அவர்கள் பெருங் கருணைகூர்ந்து உரை நடைபெறுக! என்று ஆணை தந்ததுமன்றி, இதனுள் ஒரு நாயனாரது சரித உரையைத் தங்கள் ஆதீனம் தனி வெளியீடாக வரும்படி உதவுவதாகவும் அருள்புரிந்தார்கள். அதுகாலை அவ்வாதீனத்து முனிவர் குழாத்தில் ஒருவராகிய ஸ்ரீமத் இராமலிங்கத் தம்பிரான் சுவாமிகள் அடியேனையும் உரை முயற்சியினையும் மகா சந்நிதானங்களின் திருமுன்பு பேரன்பு கூர்ந்து அறிமுகப்படுத்தி அவர்களது அருளைப்பெற உதவிபுரிந்தார்கள்; பின்னர் ஒரு மதிப்புரையும் தந்தருளினார்கள். அது இரண்டாம் பகுதியில் வெளிவந்துள்ளது. இப்போது, அவர்கள் சிவபதநீழலில் சமாதிகூடி யருளிவிட்டார்கள் என்பது குறிப்பு வருந்துகின்றேன். இப்பாகம் நிறைவேறி வெளிவரும் இந்நாளில் உடனிருந்தால் மிகவும் மகிழ்வார்கள். இனி, அவ்வாறு மகாசந்நிதானங்கள் ஆணைதந்து ஆண்டுகள் பல கழிந்துசென்றன. உரையும் ஆமை வேகத்தின் விரைவாய் நடைபெற்று வந்தது. பின்னர்த் திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடங்கினேன். அவர் துறவுநிலையினர் ஆதலாலும், சைவ சமய ஞானாசிரிய மூர்த்திகளுள் ஒருவராதலாலும் அவர் புராணம் தங்கள் |