கோட்டாறு ஆண்டகை
     
                    மாண்புமிகு
     
        ம. ஆரோக்கியசாமி, D. D. அவர்கள்
     
                அன்புடன் அளித்த

வாழ்த்துரை

     "தேன் சொட்டும் தேம்பாவணிக்குப் புதியதோர் உரை தேவை.
அதற்குக் கோட்டாறு ஆயர் அவர்கள் உதவி செய்ய வேண்டும்" என்று
மூன்று ஆண்டுகளுக்கு முன் பொது மக்கள் சிலர் பொதுமேடையில்
விண்ணப்பம் செய்தனர்.

     அதற்கிணங்க, வெளிநாட்டிலிருந்துகொண்டு அறப்பணி செய்துவரும்
'Missio' என்ற அமைப்புக்கு எழுதினேன்; உதவியும் கிடைத்தது.
அதைக்கொண்டு, பேராசிரியர் வி. மரிய அந்தோணி அவர்கள் எழுதும்
இப்புதிய உரை வெளிவருகின்றது.

     தேம்பாவணி புனித சூசையப்பர் வரலாறு கூறும் காப்பியம். இதில்
இயேசுவின் வரலாறும், மரியன்னையின் வரலாறும் இணைந்து வருகின்றன.
முதற்காண்டம் புதிய ஏற்பாட்டு நிகழ்ச்சிகளையும், இரண்டாம் காண்டம்
பழைய ஏற்பாட்டு நிகழ்ச்சிகளையும், மூன்றாம் காண்டம் இறையியல் கருத்துக்களையும் மிகுதியாகக் கொண்டுள்ளன.

     எனவே தேம்பாவணி விவிலியக் கருத்துக்களை விரித்துரைக்கும்
விவிலிய விளக்க நூல். 18ஆம் நூற்றாண்டில் வழக்கிலிருந்த இறையியல்
கருத்துகளை எடுத்துக்கூறும் இனிய நூல். இயேசு, மரியன்னை, சூசையப்பர்
மீது நம்மிடம் பக்தியை எழுப்பும் புனித காப்பியம்.

     இவ்வாறு நமது அறிவும் அன்பும் வளர உதவி செய்யும் தேம்பாவணி
இப்புதிய உரை வழியாக எல்லார்க்கும் பயன்படுக என மனமார
வாழ்த்துகிறேன்.

     இந்நூல் வெளிவர ஊக்கமுடன் உழைத்திட்ட
சுவாமி வி. மி. ஞானப்பிரகாசம் அவர்கட்கும், அவரோடு ஒத்துழைத்த
எல்லாருக்கும் எனது பாராட்டும், நன்றியும்.

     வாசகப் பெருமக்கள் அனைவர்க்கும் எனது அன்பும் ஆசீரும்.

நாகர்கோவில்                          + ம.ஆரோக்கியசாமி
23-11-82                                 கோட்டாறு ஆயர்.