iii
கொங்கு மண்டல சதகங்கள்

ஆய்வுரை

வரலாறு

பண்டைக் காலந்தொட்டே கொங்குநாடு வரலாற்றுப் புகழ் பெற்ற
நாடாக விளங்கி வந்துள்ளது. சங்க இலக்கியங்கள் கொங்கு நாட்டையும்
கொங்குமக்களையும் பற்றிப் பலவாறாக எடுத்துரைக்கின்றன. 'ஆகெழு
கொங்கர்', 'நாரறிநரவிற் கொங்கர்' 'கட்டிப் புழுக்கிற் கொங்கர்', 'கொங்கர்
வள்ளருங் கண்ணி', 'ஒளிறுவாழ் கொங்கர், 'ஈர்ம்படைக்கொங்கர்'
என்றெல்லாம் பழம்பாடல்கள் பாராட்டும். கி.பி. முதல் இரண்டு
நூற்றாண்டுக்குரிய கொங்கர் வரலாற்றைச் சங்க இலக்கியம் கூறும்.
ஆராய்ந்து நோக்கினால் சங்க இலக்கியத்தின் பெரும்பகுதி கொங்குநாட்டின்
படைப்பாக விளங்குவதை அறியலாம். செங்குட்டுவன் போன்ற சேர
வேந்தரது திறமையான ஆட்சியும் காரி, பாரி, ஓரி, அதியன் முதலாய புகழ்
பெற்ற குறுநில மன்னர்களின் வரலாறும் கொங்குநாட்டின் புகழைக் காட்டும்.
இங்கு உழவும் வாணிகமும் செழித்தோங்கி வளம் நிலவியது. கி.பி. முதல்
இருநூற்றாண்டுக்குரிய பொன் வெள்ளியாலான ரோம நாணயங்கள்
கொங்குநாட்டில் மிகுதியாகக் கிடைப்பது வாணிகச் சிறப்பைக் காட்டும்.

சதக நூல்கள்

காலந்தோறும் பல்வேறு வகைகளிலும் புகழ்பெற்று விளங்கும்
கொங்குநாட்டில் வரலாற்றை விசயமங்கலத்தைச் சார்ந்த அறிஞர்
கார்மேகக் கவிஞரும், வாலசுந்தரக்கவிராயரும் கம்பநாத சாமிகளும்
தொகுத்துத் தனித்தனியே கொங்குமண்டல சதகம் என்னும் பெயரில்
இனிய பாகங்களாகத் தந்துள்ளனர். இந்நூல்களில் காணப்பெறும் பல்வேறு
செய்திகளால் அந்நாட்டுப் பண்பாடும், வரலாறும் பழக்கவழக்கங்களும் இனிது
புலனாகின்றன. தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் தம் வாழ்த்துப்பாவில்.

இந்நாட்டின் அறிவொழுக்கம் ஏந்திழையார்
     அறவொழுக்க மீகை ஈரம்
மன்னாட்டுப் படைமிடையும் வள்ளன்மார்
     கொடைமடமும் மறவோர் வீரம்
சொன்னாட்டுப் புலவருரை துகளறுத்தோர்
     நிறையுரையும் துலங்கு மற்ற
பன்னாட்டத் துறைபரப்பில் படிந்துமுகந்
     துளங்கொண்டு பரிவா லம்மா!