பதிப்புரை

பதினேழாம் நூற்றாண்டில் தலைசிறந்து விளங்கிய புலவர் இருவர். ஊமைப் பிள்ளையாயிருந்து உமையாள் மைந்தனின் அருள்பெற்றுப் பேசிய குமரகுருபரர் ஒருவர். சான்றோருடைத்தான
தொண்டை நாட்டில் தோன்றிக் கவிச்சுடராகத் திகழ்ந்த துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்
மற்றொருவர்.

சிவப்பிரகாசர் செந்தமிழ்ச் சுவைக் கனிகளை ஈந்தவர். அவர்தம் கடன்மடை திறந்தது போன்ற
கவிப் பெருக்கைக் கண்டு வியக்காத புலவர்கள் இல்லையெனலாம். சிற்றிலக்கிய வகைகளில்
சிறப்பான அந்தாதி, மாலை, கோவை, கலம்பகம், பிள்ளைத்தமிழ், உலா போன்ற பல துறைகளிலும் சிவப்பிரகாசர் நூல்கள் இயற்றியுள்ளார்.

தமிழ் பயில்வோர் பெரும்பாலும் ஆசிரியர்களையடுத்து முதற்கண் அந்தாதி, உலாபோன்ற
சிற்றிலக்கியங்களையே பாடங்கேட்டுப் பயில்வது வழக்கம். அவ்வாறு பயில்வோர் சிவப்பிரகாசர் பனுவல்திரட்டு, குமரகுருபரர் பனுவல்திரட்டு, சிவஞானமுனிவர் பனுவல்திரட்டு ஆகிய
நூல்களையே முறையாகப் பயின்று வந்தனர்.

எனவே குமரகுருபரர் பனுவல்திரட்டையும், சிவஞான முனிவர் பனுவல்திரட்டையும் முதற்கண் வெளியிட்டோம். அதன்பின் பாகனேரி இளைஞர் தமிழ்ச் சங்க வெளியீடாகச் சிவப்பிரகாசர் பனுவல்திரட்டை 1941இல் கழகவழி வெளியிடப்பெற்றது. அதன்கண் குறிப்புரை நூலிறுதியில் பின் இணைப்பாகச் சேர்க்கப்பெற்றது.

இப்போது அதனைக் கழக வெளியீடாகவே விளக்கக் குறிப்புரையினைத் திரு. சு. அ. இராமசாமிப் புலவர் அவர்களைக் கொண்டு எழுதுவித்துச் செய்யுள் வரும் பக்கத்தின் அடியிலேயே படிப்போர் எளிதிலே செய்யுளின் பொருளை உணர்ந்து கொள்ளும் வகையில் இணைத்து
அச்சிட்டுள்ளோம்.

இச் ‘சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு’ என்னும் நூலில் சோணசைல மாலை முதலாய ஆறு மாலை நூல்களும் இரு அந்தாதி நூல்களும் இரு கலம்பகமும் தூது, பிள்ளைத்தமிழ், கோவை, உலா, ஆகியவற்றில் ஒவ்வொரு நூலும் பிற தனித்தனி நூல்களும்
சேர்க்கப்பெற்றுள்ளன. மாணவர்க்கு என்றென்றும் பயன்தரக்கூடிய ‘நன்னெறி’யும் இதில்
சேர்க்கப்பட்டுள்ளது.

இலக்கியக் கருவூலமாகத் திகழும் இந்நூலைத் தமிழ் பயில்வாரும் பயின்றாரும் படித்துப் பயன்பெற வேண்டும். இலக்கிய நயத்திலாழ்ந்து இன்பம் காண விழைவோருக்கும் இலக்கியம் கற்றுச்
சொல்லாற்றலைப் பெருக்கிக்கொள்ள விரும்புவோர்க்கும் இந்நூல் பெரிதும் பயன்படும்.

சிவப்பிரகாசர் பனுவல்திரட்டு சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச் செய்த தோத்திரப் பிரபந்தத் திரட்டு என்னுந் தலைப்பில் திரு சிவஞான பாலைய தேசிகராதீனத்துச் சிதம்பரம் ஈசானிய மடம்
இராமலிங்க சுவாமிகளால் பல ஏட்டுச் சுவடிகளைக்கொண்டு ஆராய்ந்து அருஞ்செய்யுள் உரைக் குறிப்போடு 1890ஆம் ஆண்டிலும், 1906ஆம் ஆண்டிலும் வெளியிடப்பெற்றது.

அதன்பின் 1916ஆம் ஆண்டில் மூவர் தேவாரத்தைத் தலமுறையில் மிகவும் அழகாக
வெளியிட்ட சிவத்திரு சுவாமிநாத பண்டிதரவர்கள் அருஞ்சொற் குறிப்புரையினைப் பின்
இணைப்பாகச் சேர்த்தும், நூல் முழுமையிலுமுள்ள செய்யுட்களைச் சீர்பிரித்தும் சிவப்பிரகாசர் பனுவல் திரட்டை வெளியிட்டனர்.

1944ஆம் ஆண்டில் மேலே குறிப்பிட்ட பனுவல் திரட்டிலுள்ள நூல்களோடு சுவாமிகள்
இயற்றியருளிய திருக்கூவப்புராணம், பிரபுலிங்க லீலை, வேதாந்த சூடாமணி, சித்தாந்த சிகாமணி, இயேசுமத நிராகரணம், சீகாளத்தி புராணம் இடைப்பகுதி ஆகிய நூல்களையும் சேர்த்து
நல்லாற்றுச் சிவப்பிரகாசர் செந்தமிழ் நூல்கள்’ என்ற தலைப்பில் திருமயிலம் தேவத்தான வெளியீடாக திருமயிலம் ஆதீனம் 18ஆம் பட்டம் திருவருட்டிரு சிவஞான பாலைய சுவாமிகளால் வெளியிடப்பெற்றது.

இப்பதிப்பு தமிழின்பத்தில் திளைக்க விரும்புவோர்க்குப் பெரிதும் பயன்படுமென எண்ணுகிறோம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.