உங்களுடன் ஒரு கணம். . .

மகா கவிஞர் இரவீந்திரநாத் தாகூரின் Lover’sGift என்ற ஆங்கில
நூலைத் தமிழ் மொழி பெயர்ப்பாக இல்லாமல் மொழியாக்கம் செய்து
‘காதற்பரிசு’ என்ற கவிதைத் தொகுப்பு நூல் ஒன்றைச் சென்ற ஆண்டு
வெளியிட்டேன். ஆன்றோரும் சான்றோரும் இளைய தலைமுறையினரும்
அதை நன்குவரவேற்றனர்.

இதையடுத்து எனக்கொரு துணிவு ஏற்பட்டது.இரவீந்திரர் தமிழகத்தில்
பிறந்திருப்பின் எவ்விதம்கீதாஞ்சலியைப் பாடியிருப்பார் என்று சிந்தித்தேன்.
எனவே வங்காள மொழியிலுள்ள கீதாஞ்சலியை ஓதி உணர்ந்தபின், செந்தமிழ்
மொழியில் கீதாஞ்சலியைப் பாடுவதென்று முடிவு செய்தேன்.

வால்மீகி இராமாயணம் மூலக்கதையாயின் கம்பராமாயணம் வழிநூல்.
எனினும் கம்பனின் காவியம் தன் சொந்தப் படைப்பே (Original), அதே
முறையில் தான் கீதாஞ்சலியைத் தமிழ்க் கீதாஞ்சலியாக முழுக்க முழுக்க
என்னுடைய சொந்தப் படைப்பாகப் பாடியுள்ளேன்.

இப்பாடல்களை நான் மதுரைக் கோட்ட ஊராட்சி அலுவலராக இருந்த
காலத்தில் பாடி முடித்தேன். இது அலுவலக வெளியீடன்று.

தமிழக அரசு தனது 1972-ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் நாளிட்ட
ஆணை எண் 159 மூலம் இந்நூலை வெளியிட எனக்கு அனுமதியளித்தது.
என் நன்றி உரித்தாகுக.

மாநில ஊர் வளர்ச்சி நெறியாளர் அவர்கள் 18.11.1971 நாளிட்ட கடித
எண் 121272 கே 1 கே 3-ல் இந்நூலை ஊராட்சி ஒன்றிய நூலகங்கட்குப்
பரிந்துரை செய்துள்ளார்கள். அவர்கட்கென் நன்றிப் பெருக்கைத் தெரிவிக்கக்
கடமைப் பெற்றுள்ளேன்.

இத்துறையில் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து வழிகாட்டிய வள்ளல்
எல்.நாராயணன் செட்டியார் அவர்கட்கு என் நன்றிகள்.

என்பால் அன்பு கொண்டு அணிந்துரை நல்கிய மதுரைப் பல்கலைக்
கழக முன்னாள்துணைவேந்தர் பண்டாரகர் மு.வரதராசனார் அவர்கட்கு
என்றும் கடமைப் பெற்றுள்ளேன்.

தண்டமிழுலகம் இத்தமிழ்க் கீதாஞ்சலிக்குத்தரும் வரவேற்பு
என்னுடைய இலக்கியப் பணிக்குஆக்கமும் ஊக்கமும் தரும் என நம்புகிறேன்.

என்பினிற் றமிழன்புசால்,
பேகன்.