|
மூன்றாவதுகதை பொன்னுருவி மசக்கை. கருணனது மனைவிக்கும் கருணனுக்கும் நடக்கும் குடும்பச் சண்டையைப்
பொருளாகக் கொண்டது. நிகழ்ச்சிகள் இந்திரப் பிரஸ்தத்திலும், தமிழ் நாட்டிலும்
நடைபெறுகின்றன. கடைசியில் கருவங் கொண்ட மனைவியை கருணன் அடி உதையால் பணிய வைக்கிறான்.
நான்காவது
கதை ஏணியேற்றம். இது அஞ்ஞாதவாச காலத்து நிகழ்ச்சி ஒன்றை பொருளாகக் கொண்டது. அர்ச்சுனன்
மனைவி சுபத்திரை மீது துரியோதனன் இச்சை கொள்ளுகிறான். அவனுடைய தீய எண்ணத்தை அறிந்த
சுபத்திரை மதுரையிலுள்ள அவனது சகமனைவி அல்லியிடம் சரண் புகுகிறாள். அவள் மதுரை சென்றதையறிந்து
துரியோதனன் அங்கு வருகிறான். அவனைத் தண்டிக்க வேண்டுமென்ற முடிவில் அல்லி அவனை வரவேற்று
சுபத்திரையிடம் அனுப்பி வைப்பதாகச் சொல்லுகிறாள். காமத்தால் மதியிழந்த துரியோதனன்
அவளது சூழ்ச்சியை உணராமல் அவள் சொற்படி நடக்கச் சம்மதிக்கிறான். அல்லி தமிழ் நாட்டுத்
தச்சர்களின் திறமையைப் பயன்படுத்தி ஏணி எந்திரமொன்று செய்யச் சொல்லுகிறாள். அந்த
ஏணி ஏறுமாறு துரியோதனனை வேண்டுகிறாள். ஏணியின் கடைசிப் படியில் சுபத்திரையைப்போல
பதுமையொன்று பொருத்தப்பட்டிருந்தது. துரியோதனன் ஏணியில் ஏறியதும் ஆணிகள் அவன்மீது
பாய்ந்தன. பிரம்புகள் அவனை அடித்தன. இறங்க முடியாதபடி சில கம்பிகள் அவனைப் பிணைத்தன.
அல்லி ஏணியைப் பாண்டியர்களிடம் செல்லுமாறு கட்டளையிட்டாள். அங்கே அவன் அவமதிக்கப்பட்டான்.
பின்பு அங்கிருந்து நாகலோகத்திற்கு ஏணியை அனுப்பினார்கள். ஆதிசேஷன் துரியோதனனை
அவமதித்து, மேகராஜனிடம் அனுப்பினான். அங்கிருந்து பல உலகங்கள் சுற்றிக் கடைசியில்
கிருஷ்ணனிடம் ஏணி வந்து சேர்ந்தது. கண்ணன் அவனைப் போற்றுவதுபோல் தூற்றி ஏணியை ஐவரிடத்தில்
அனுப்பி வைத்தான். ஐவர் அவனைக் கண்ட பொழுது, பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன்
ஆகியோர் அவனைக் கொல்ல வேண்டுமென்று சொல்லுகிறார்கள். தருமர் அவனுடைய தவறுக்கு உரிய
தண்டனையை நம் நாட்டுப் பெண்களே கொடுத்து நிறைவேற்றி விட்டார்கள் என்று கூறிக் கதையின்
நீதியை விளக்குகிறார்.
“இவன் பெண்ணை அழிக்க வந்தான் பெண்களால் சீர்குலைந்தான்
நெருப்புக்கு முன்னெதுவும் நில்லா விதம் போல
|