சொத்து சுகத்தையும் தியாகம் செய்தான். உழைப்பாளி மக்களைக் காப்பதற்காகவும் பொதி மாட்டு வியாபாரிகளுடைய வாணிபத்தைப் பாதுகாப்பதற்காகவும் கள்ளர்களை எதிர்த்துப் போராடி உயிர் விட்டவன். அவனுடைய மனைவிமார் இருவரும் உடன்கட்டையேறி உயிர் நீ்த்தார்கள். இக்கதையின் சரித்திரப் பின்னணி பற்றியும், கதா பாத்திர அமைப்பு பற்றியும், தென்பாண்டி நாட்டில் அவன்புகழ் வளர்ந்ததைப் பற்றியும் பல தொடர் கட்டுரைகள் எழுதி சரஸ்வதி என்ற பத்திரிகையில் வெளியிட்டுள்ளேன். அதனைப் படித்த செக் தமிழறிஞர் டாக்டர் கமில் சுவலபில், “உலகிலேயே மிகச் சிறந்த கதைப் பாடல்களுள் இது ஒன்று” என்று அபிப்பிராயம் தெரிவித்து அதனையும் எனது கட்டுரைகளையும், செக் மொழியிலும், ஆங்கில மொழியிலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். தமிழ் நாட்டுக் கதைப் பாடல்களில் பிறமொழியில் வெளியான கதைப் பாடல் இது ஒன்றே.

சின்னத்தம்பி என்ற சக்கிலியச் சிறுவன் மலைவிலங்குகளின் சல்லியத்தினால் வேளாண்மைக்கு இடையூறு நேர்ந்த பொழுது அவற்றைக் கொன்று விவசாயிகளுக்கு நன்மை செய்தான். அவன் புகழ் பெற்று உயர்வடைவதைக் கண்ட மேல் சாதிக்காரர்கள் புதையல் எடுப்பதற்காக அவனை பலி கொடுத்து விட்டார்கள்.

இக்கதை சாதியால் உயர்ந்தவர்கள், சாதியில் தாழ்ந்தவர்களை முன்னுக்கு வரவிடாமல் கொடுமைப்படுத்தி அழித்ததைக் கூறுகிறது. கொடுமையைக் கண்டித்தும் கொடுமைகளுக்கு உள்ளானவர்களைப் புகழ்ந்தும் பாடுகிறது இப்பாடல்.

நல்லதங்காள் கதை, நாடகங்களின் மூலம் தமிழ் நாடு முழுவதும் சிறிது காலத்திற்கு முன்னர்வரை பரவியிருந்தது. பெண்களுக்குப் பிறந்தகத்தின் சொத்துரிமை இல்லாததால் வரும் அவதிகளை அது வருணிக்கிறது.

சின்ன நாடான் கதை, சொத்துரிமை சமுதாயத்தில், வாரிசு உரிமையைப் பாதுகாப்பதே முதன்மையானதென்று அதைப் பாதுகாக்க மகனைக் கொல்லவும் தந்தை துணிவான் என்பதைப் புலப்படுத்துகிறது.

சமூகக் கதைகளில் பெரும்பாலானவை உண்மை நிகழ்ச்சிகளே. இந்நிகழ்ச்சிகளுக்குக் கற்பனையால் கலையுருவம் கொடுக்கப்பட்டுள்ளது. இவையாவும் சோக முடிவுடையனவாக இருக்கின்றன. அதற்குக் காரணம் தமிழ் நாட்டின் கிராம சமுதாயத்தின்