|
இதற்குப்
பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போராடிய கட்ட பொம்முவைப் பற்றிய பல
கும்மிகளும், சிந்துகளும் இருப்பதாகத் தெரிகிறது. அவற்றில் ஒன்றை, சென்ற ஆண்டு நான்
வெளியிட்டுள்ளேன். மருது சகோதரர்களைப் பற்றி ‘சிவ கங்கை அம்மானை’, ‘சிவகங்கைக்
கும்மி’ என்ற இரண்டு நாட்டுப் பாடல்களை ஓரியண்டல் மானுஸ்கிரிப்ட்ஸ் லைப்ரரிக்காகத்
தமிழக அரசாங்கம் வெளியிட்டுள்ளது. கான் சாகிப் பற்றியும் பூலித்தேவனைப் பற்றியும்
கதைப்பாடல்கள் ஏட்டுப் பிரதிகளாக இருக்கின்றன என்று தெரிகிறது. அவை கிடைத்து வெளியிடப்படுமானால்
தொடர்ச்சியாக முன்னூறு, நானூறு வருஷங்களுக்கு இடையில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்ச்சிகளைப்
பற்றித் தமிழ் நாட்டு உழைப்பாளி மக்களின் கருத்துகளை அறிவதற்கு வழி கிடைக்கும். தமிழ்
நாட்டு வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள், இக்கதைப் பாடல்கள் தங்கள் பகுதிகளில் கிடைக்குமானால்
எனக்கு அனுப்பி வைக்க வேண்டிக் கொள்கிறேன். அவை அனைத்தையும் சேகரித்து வெளியிடுவது
தமிழ் நாட்டுப் பண்பாட்டு வரலாற்றைத் தொடர்ச்சியாக அறிந்து கொள்வதற்கு மிகவும் உதவியாக
இருக்கும்.
இனிக் கதைப்பாடல்களில் பாமர தெய்வங்களைப்
பற்றிய வில்லுப்பாடல்களும், அம்மானைகளும் அடங்கும். வில்லுப்பாட்டுகள் நெல்லை, குமரி
மாவட்டங்களில் இன்னும் பாடப்படுகின்றன. அவற்றில் சொல்லப்படும் கதை பாமரர் வணங்கும்
தெய்வங்களின் வரலாறுகளே. இவற்றை இரு வகையாகப் பிரிக்கலாம்.
தேவியரைப் பற்றிய கதைகள் பழமையானவை. மாடன் முதலிய
தேவர்களைப்பற்றிய கதைகள் இடைக்காலத்தவை.
திரு. கி. வா. ஜகந்நாதன் அவர்கள் ‘அலையோசை’
என்ற
நாட்டுப்பாடல் திரட்டில் பாமரர் வணங்கும் தெய்வங்களின் அட்டவணையொன்று கொடுத்துள்ளார்.
அவற்றுள் வேதக்கடவுளரை நீக்கி விட்டால் 60 தெய்வங்கள் இருக்கின்றன. இத்தெய்வங்கள்
மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடுகின்றன.
தேவியரில்
பெரும்பாலானவை மூர்க்க தேவதைகளே. பரட்டைத்தலை, கொட்டை விழி, கோரைப்பற்கள் முதலிய
அசுர அம்சங்கள் எல்லாத் தேவதைகளுக்கும் பொதுவானவை. இவை பெண்ணாதிக்க சமுதாயத்தின்
எச்சமாக நிற்கின்றன. இவற்றுள் முத்தாரம்மன், குமரி, செல்வி முதலிய தேவியர் தென்பாண்டி
நாட்டில் பிரபலமானவை.
|