|
தாலாட்டு
சாய்த்தாள் திருமுகத்தை
‘வானர மதுரை’ என்னும் மானாமதுரையை தங்கள் புராதனப் பிறப்பிடமாக
தேவர், கள்ளர் என்னும் சாதியினர் கருதுகிறார்கள். தாங்கள் ‘பாண்டியன்’ உறவினர் என்றும்
நம்புகிறார்கள்.
இத் தாலாட்டுப் பாடலில் தாய் வருங்காலம் பற்றி காணும்
கனவொன்றைச் சித்திரமாகத் தீட்டுகிறாள். மானாமதுரையில் பிறந்த இச் சிறுவன் தனது தங்கைக்குச்
சீதனமாக பிறந்த ஊரையும், வென்று கொண்ட மதுரையில் பாதியையும் விட்டுக் கொடுத்தான்.
மதுரைக்கருகே தல்லா குளம் என்றோர் ஏரி உள்ளது. அதனையும் சேர்த்து தனக்குச் சீதனமாகத்
தரவில்லையே என்று தங்கை சிணுங்கிக் கொண்டு திருமுகத்தைச் சாய்த்துக் கொண்டாளாம்.
“அண்ணன் எது கொடுத்தாலும், இன்னும் அதிகமாகக் கொடுக்கமாட்டானா என்று ஏங்கும் தங்கை
உனக்குப் பிறக்கப் போகிறாள். அவள் ஆசையை நிரப்புமளவுக்கு, நிறையப் பொருள் சேர்க்கவேண்டும்” என்று பேச்சுப் புரியாத குழந்தைக்குத் தாய் போதிக்க முயலுகிறாள்.
| |
உச்சிமலைக் கந்தா,
உயர்ந்த மலை வேல்முருகா
சாய்ந்த மலைக்கந்தா என்
சஞ்சலத்தைத் தீருமய்யா
சீரார் சிலம்போசை, என்
செல்வ மகன் காலோசை
பாரச் சிலம்போசை,
நீ பைய வா பாலகனே!
மழை பெய்து தண்ணீர் வர,
வாந்த மணல் ஓடிவர,
நீ நடந்து வா பாலகனே!
உன் தடம் நான் பார்க்க
ஐந்து தலையாண்டி,
ஆறு முக வேலாண்டி
பிச்சைக்கு வந்தாண்டி,
பிள்ளைக்கலி தீர்த்தாண்டி
மலட்டு ஆறு பெருகிவர,
மாதுளையே பூ சொரிய
புரட்டாசி மாத்தையிலே பொன்
பெட்டகம் போல் வந்தவனோ!
தாழை ஒரு மடலோ, உன்
தாயாருக்கோ ஒரு மகனோ
தாழை மடல் ஓலை கொண்டு
தமிழ் படிக்க வந்தவனோ!
மானா மதுரை விட்டு தங்கை மீனாளுக்கு
மதுரையிலே பாதி விட்டு
தல்லா குளம் தரவில்லைண்ணு தங்கை மீனா
சாய்த்தாள் திருமுகத்தை |
|
சேகரித்தவர்:
குமாரி பி. சொர்ணம் |
இடம்:
சிவகிரி,
நெல்லை மாவட்டம். |
|