சந்தேகம்

குடும்ப வாழ்க்கைக்குச் சந்தேகம் எதிரி! அது குடும்ப ஒற்றுமையைச் சிதைத்துவிடும். ஆயினும், தமது சமூக வாழ்க்கையில் தவறுகள் நிறைந்து இருப்பதால் தம்பதிகளிடையே ஒருவர் மீது ஒருவருக்குச் சந்தேகம் ஏற்படுவது சகஜமாக இருக்கிறது. அதுவும் பெண்கள் தங்கள் கணவர்கள் குறித்த நேரம் தவறி வந்தால் சந்தேகப்படுகிறார்கள். 'இரவு திரும்புகிறேன் ' என்று சொல்லிச் சென்ற கணவன் இரவில் வராவிட்டல், அவனை 'எந்தப் பெண் கைப்பற்றி விட்டாளோ? ' என்று கற்பனைக் கவலைகளால் மூழ்கிவிடுகிறாள்.

போனா இருக்க மாட்டார்
பொழுதிருக்கத் தங்க மாட்டார்
என்ன மனசி லெண்ணி
இருந்தாரோ ராத்தங்கி

துரையே துரை மகனே
தோக்கலவார் வம்முசமே
இடை சிறுத்தச் செல்லச் சாமி
எவளெடுத்துக் கொஞ்சிறாளோ?

மொச்சிக் கொழுந்தே நீ
முழக்க முள்ள தாமரையே
அல்லி மலர்க் கொடியே
யாராலே தாமுசமோ

தெற்குத் தெருவிலேயோ
தேமலக்கா வீட்டிலேயோ
செங்கக் கட்டி திண்ணையிலோ
தங்கக் கட்டி நித்திரையே?

குலை வாழை நெல்லுக் குத்தி
குழையாமல் சோறு பொங்கி
இலை வாங்கப் போனசாமி
எவளோட தாமுசமோ?

நாலு மகிழம் பூவு
நாற் பத்தெட்டு ரோஜாப் பூவு
நானெடுத்துக் கொஞ்சும் பூவை-இப்ப
எவளெடுத்துக் கொஞ்சுறாளோ?

இருட்டை இருட்டடிக்க
ஈச்ச முள்ளு மேலடிக்க
இருட்டுக் கஞ்சா கொடிப்புலியை
எவளெடுத்துக் கொஞ்சுறாளோ?

எண்ணைத் தலைமுழுகி
எள்ளளவு பொட்டுமிட்டு
இலை வாங்கப் போனசாமி
எவ பிடிச்சு லாத்துறாளோ?

பொட்டு மேலே பொட்டு வச்சி
புறப்பட்டுப் போன சாமி
பொட்டு அழிஞ்ச தென்ன
போய் வந்த மர்ம மென்ன?

சேகரித்தவர் :
S.S.போத்தையா

இடம் :
நெல்லை மாவட்டம்.