கண்டதுண்டோ?

காட்டுக்குச் சென்று மாடு மேய்க்கும் காதலனை அடிக்கடி காதலியால் காண முடிவதில்லை. அவனும் அவளைக் கண்டு பல நாட்கள் ஆயின. ஒரு நாள் காலையிலேயே எழுந்து மந்தை கிளம்பு முன், காதலி அவனைக் காண்பதற்கு ஊரின் எல்லையில் போய் நின்றாள். அவன் வந்ததும் அவனிடம் “பாலகனைக் கண்டதுண்டோ?” என்று கேட்கிறாள். அவன் அவளை “யாராவது அயலூர் ரோடுகளிலே பார்த்ததுண்டோ?” என்று கேட்கிறான். ஊரில் காண முடியவில்லையல்லவா? அவன் பதிலாக ஒரு பாட்டும் உள்ளது.

காதலி: கொத்துக் கடை மத்தாளமாம்
கொரங்குக் கல்லாம் கரடிக்கடை
பசு மேயும் பாரமலை-ஒரு
பாலகனைக் கண்டதுண்டோ?
காதலன்: சேத்தூரு சிமின்டு ரோடு
சிவகிரி தாரு ரோடு
புளியங்குடி மண்ணு ரோடு-ஒரு
பெண் மயிலைப் பார்த்தியளா?
 

வட்டார வழக்கு: பார்த்தியளா?-பார்த்தீர்களா?

குறிப்பு: முதல் இரு அடிகளில் வருவன, மலைச்சாரலில் குறிப்பிட்ட இடங்களின் பெயர்கள்.

சேகரித்தவர்:
S.M. கார்க்கி

இடம்:
சிவகிரி.