|
காதல்
இனி காத்திருக்க முடியாது
முத்தம்மாள், முத்தையாவின் மீது காதல் கொண்டாள். அவர்கள் அடிக்கடி சந்தித்தார்கள்.
இவர்கள் நட்பு ஊரில் அம்பலமாயிற்று. வீட்டில் கட்டுக்காவல் அதிகமாயிற்று. அவனது வீட்டார்
முறையோடு வந்து பெண் கேட்டால், அவளை அவனுக்கு மணம் செய்து வைக்க சம்மதமே. அவன் வெட்கப்பட்டுக்
கொண்டு தன் வீட்டில் சொல்லாமலே இருந்தான். அவனைச் செயலுக்குத் தூண்டுவதற்காக முத்தம்மாள்
அவன் காது கேட்கப் பாடுகிறாள். அவன் சாலை வழி வருவதைக் கண்டும் காணாதவள் போல அவனிடம்
சொல்ல வேண்டியவைகளை
எல்லாம் பாட்டில் சொல்கிறாள். இன்னும் காத்துக் கொண்டிருந்தால், மண உறவு முறிந்து
பகையாகிவிடும் என்று எச்சரிக்கிறாள்.
ஈக்கிக் கம்பி வேட்டியில
ஏலரிசிமுடிஞ்சிவிட்டேன்
தின்னாமப் போராரே
திண்டுக்கல்லு வாய்தாவுக்கு
திண்டுக்கல்லாம் சங்கதியாம்
தேசங் கோட்டு வாயிதாவாம்;
வாய்தாவை தீத்துப் போட்டு
வந்திருவார் இந்த வழி
வந்திருவார் இந்த வழி
வாச்சிருவார் தங்க குணம்
தந்திருவார் வெத்திலைய
போட்டிருவேன் வாய் செவக்க
வருவாரு போவா ருண்ணு
வழியெல்லாம் கிளி யெழுதி
இன்னும் வரக் காணலியே-இந்த
இண்டழிஞ்ச பாதையிலே
கல்லுரலு காத்திருக்க
கருத்தக் கொண்டை செவத்தசாமி!
ஏனையா காத்திருக்கே
எல்லாம் பகையாக?
வட்டார வழக்கு:
கிளியெழுதி-கிளிப்படம்
போட்டு, இது காதலுக்கு அடையாளம்
ஏலரிசி-வரகரிசி
வாச்சிடுவார்- வாய்த்திடுவார்.
குறிப்பு:
வாய் செவக்க- ஒருவன் கொடுத்த வெற்றிலையை ஒரு பெண்
போட்டுக் கொள்வது இணக்கத்தை குறிக்கும். அதை மென்று தின்னும்போது அவள் வாய் சிவந்தால்
கொடுத்தவனுடைய அன்பு மாறாது என்பது நம்பிக்கை.
இண்டழிஞ்ச-முட் செடிகள்
அழிந்து முள் சிதறி கிடக்கிற பாதை.
|
சேகரித்தவர்:
S.M.
கார்க்கி |
இடம்:
சிவகிரி,
|
|