அத்தை மகன் முத்துச்சாமி

முத்துச்சாமி, முத்தம்மாளின் முறைமாப்பிள்ளை. கேலி செய்யும் போக்கில் அவள் தலையில் சூடியிருந்த பிச்சிச்சரத்தை அறுத்தெறிந்தான். மலர் சூடுவதற்கு பதில் மலரைச் சிதைப்பது அமங்கலமென அவள் எண்ணினாள். பொய்க்கோப முகங்காட்டி அவனைக் கடிந்து கொள்கிறாள். 'என்னை விரும்பாத உன்னை விட்டு வேறொரு இளைஞனைத் தேடிச் செல்லுகிறேன்', என்று கூறி அவனுக்குப் பொறாமையூட்ட முயலுகிறாள். அவன் முன்னைய இன்ப நிகழ்ச்சிகளை நினைவூட்டி அவளைச் சமாதானப்படுத்த முயலுகிறான். முடிவு நமது ஊகத்துக்கு விடப்பட்டுள்ளது.

முத்தம்மாள் : கொத்த மல்லித் தோட்டத்திலே
குளிக்கப் போயி நிக்கையிலே
அத்தை மகன் முத்துசாமி
அத்தெரிந்தான் பிச்சிச்சரம்
முத்துச்சாமி : சத்திரத்துக் கம்மாயிலே
மொச்சி நெத்-தெடுக்கையிலே
குத்துக் கல்லு மேலிருந்து-நான்
கூப்பிட்டது கேக்கலியோ?
கூடைமேலே கூடை வச்சு
குமரிப் புள்ளே எங்க போற
முத்தம்மாள் : ஏழுமலை கழிச்சு-ஒரு
எள வட்டத்தைத் தேடிப்போறேன்
முத்தச்சாமி : பாக்குத் துவக்குதடி
பழய உறவு மங்குதடி
ஏலம் கசக்குதடி
என்னை விட்டுப் போறதுக்கோ?

வட்டார வழக்கு : நிக்கையிலே-நிற்கையிலே; மொச்சி-மொச்சை; அத்து-அறுத்து.

சேகரித்தவர்:
S.M. கார்க்கி

இடம்:
சிவகிரி,