|
தேசமெங்கும் பேராச்சு
அவள் மணமாகாதவள். அவளுக்கு காதலன் இருக்கிறான்
என்று ஊரெல்லாம் பெயராகிவிட்டது. அவனை அவள் விரும்புகிறாள். ஆனால், அவனை பார்த்துப் பழகி இன்பம் துய்க்கவில்லை. ஆனாலும்
ஊரில் அவனையும் அவளையும் சேர்த்துப் பல கதைகள் பேச ஆரம்பித்தனர். ஒரு
புறத்தில் அவளுக்கு அச்செய்தி மகிழ்ச்சியைக்
கொடுத்த போதிலும், மறுபுறம் இல்லாததைச்
சொல்லுகிறார்களே என்று வருத்தமும் உண்டாகிறது.
பூவரசம் பூவு நீயி
பொழுதிருக்கப் பூத்த பூவே
நாசமத்த பூவாலே
நானும் ஒருசொல் கேட்டேன்
பருத்தி பலன் பிடிக்க
பக்கமெல்லாம் சில் வெடிக்க
ஒருத்தி சமைஞ்சிருக்க
உலகமெல்லாம் பேராச்சே
வட்டுக் கருப்பட்டியை
வாசமுள்ள ரோசாவை
திண்ணு செழிக்கு முன்னே
தேசமெங்கும் பேராச்சு
பட்டு அருணாக் கொடி
பாவி மகன் தங்கக்கொடி
தங்கக் கொடி சாமியாலே
தலைபொறுக்காச் சொல் கேட்டேன்
வெத்தலைக் காம்பறியேன்
வேத்துமுகம் நானறியேன்
சுப்பையாவாலே ஒரு
சொல்லுமல்லோ நான் கேட்டேன்
கீழத் தெருவிலே யோ
சிலுக்குப் போட்ட கருணைப்புறா
மேலத் தெருவில போய்
மேயுதுண்ணுகேள்விப்பட்டேன்
ராமக் கரும்பு நீயே
ராவு திண்ண சருக்கரையே
சீனிப் பிலாச் சுளையை
தின்னணுண்ணு பேரெத்தேன்
பூசணிப் பூவே நீ
பொழுதிருக்கப் பூத்த பூவே
நாதியத்த பூவாலே
நான் ஒரு நாச் சொல் கேட்டேன்
வட்டார வழக்கு:
நாசமத்த-நாசமுற்ற;
சமைஞ்சிருக்க-ருதுவாகியிருக்க ;
அருணாக்கொடி-அரை நாண் கொடி ;
ராமக்கரும்பு-நாமக்கரும்பு.
|
சேகரித்தவர்:
S.S.
போத்தையா |
இடம்:
விளாத்திக்குளம்,
நெல்லை மாவட்டம். |
|