யாரெல்லாம் சாகவேண்டும்?

உழவர் குடும்பமொன்றில், ஒரு பெண் கடினமான உழைப்பால், பணம் சேர்த்து, சிக்கனமாக குடும்பம் நடத்தி, மிஞ்சும் பணத்தில் கோழிகள், ஆடுகள், மாடுகள் முதலியன வாங்குகிறாள். அவளுடைய முயற்சியில், வீட்டிலுள்ள ஒன்றிரண்டு பேர் ஒத்துழைக்கவில்லை. சோம்பியிருப்போர்களைப் பார்த்து ‘உழைக்காமல் உயிர் வாழக்கூடாது,’ என்னும் கருத்தைக் குடும்பத் தலைவி வேடிக்கையாக வெளியிடுகிறாள்.

ஆத்தங்கரை தனிலே
ஏலாலம்மிடி ஏலாலம்
ஆடு ரண்டு வாங்கி வுட்டேன்
ஏலாலம்மிடி எலாலம்
ஆடு ரண்டும் நல்லாருக்க
ஏலாலம்மிடி ஏலாலம்
அத்தை மகள் சாகவேணும்
ஏலாலம்மிடி ஏலாலம்

கொளத்தங்கரை தனிலே
ஏலாலம்மிடி ஏலாலம்
கோழி ரண்டு வாங்கி வுட்டேன்
ஏலாலம்மிடி ஏலாலம்
கோழி ரண்டும் நல்லாருக்கு
ஏலாலம்மிடி ஏலாலம்
கொழுந்தனாரு சாக வேணும்
ஏலாலம்மிடி ஏலாலம்

மாத்தாங் கரைதனிலே
ஏலாலம்மிடி ஏலாலம்
மாடுரெண்டு வாங்கிவுட்டேன்
ஏலாலம்மிடி ஏலாலம்
மாடு ரெண்டும் நல்லாருக்க
ஏலாலம்மிடி ஏலாலம்
மாமனாரு சாக வேணும்
ஏலாலம்மிடி ஏலாலம்

சேகரித்தவர் :
சடையப்பன்

இடம் :
சேலம் மாவட்டம்.