இரு தாரங்கள்
முன்னமே‘சக்களத்தி‘
என்னும்
தலைப்பில் வரும் பாடல்களுக்கு எழுதிய முன்னுரையில் இருதார மணத்தால் முதல் மனைவி, தன்னை
கணவன் மறந்ததற்கு இளையாள் இட்ட மருந்தே காரணம் என்கிறாள். பின்னால் அந்த நம்பிக்கையை
விடுத்து அவனையே பொறுப்பாக்கித் திட்டுகிறாள். இவள் கருவுற்றிருக்கும் பொழுதே கணவன்
இளையதாரத்தை மணந்தான். குழந்தை இல்லையென்பது காரணமல்ல. வேறுகாரணம் எதுவும் குறிப்பிடவில்லை.
ஆயினும் தனக்கு ஏற்பட்ட பாதகத்தை நினைத்து அவள் அவனைச் சபிக்கிறாள்.
வருவாரு போவாரு
வாசலிலே நிற்பாரு
சிரிச்சாலும் பேசுவாரு
சிறுக்கி வச்ச கைமருந்து
ஊருக்கில்ல போறாரு
இருக்கவில்லை போறாரு
மறுமுகம் கண்டவுடன்
மறக்க வில்லை போறாரு
மறந்தா மறப்பதில்லை
மருந்து
தின்னால் ஆறுவதில்லை
செத்தால் மறப்பதில்லை
செவலோகம் சேருமட்டும்.
பாவநாசம் பார்க்கவென்று
பாவனையா
அழைச்சுப் போயி
பத்துமாசம்
சுமசுமக்க
பரிசு தந்த நேசமைய்யா
என்னை விட்டுட்டு
இளைய தாரம் கட்டினயே
போறவழியிலே-உன்னப்
பூ நாகம் தீண்டாதோ?
|