சுங்கக் கேட்டு
ரிசர்வ் காடுகளில் சுங்கச்சாவடிகள் இருந்தன. வெள்ளையர் ஆட்சியில்
காட்டு இலாகா அதிகாரிகளின் அட்டகாசத்துக்கு அளவேயில்லை. காட்டு இலாகா காவலர்களும்
லஞ்சம் வாங்குவதற்காக கொடுமைகள் செய்வார்கள்.
இளம் பெண்ணொருத்தி பரங்கிக்கீரை பறிப்பதற்காக காட்டுக்குள்
போனாள். புல், கீரை முதலியவற்றை காட்டிலிருந்து கொண்டுவர பணம் கொடுத்துச் சீட்டு
வாங்க வேண்டும். பரங்கிக் கீரை விற்றாலும் சீட்டு வாங்க போதிய காசு கிடைக்காது.
பல நாள் கடன் சொல்லிப் பார்த்தாள். முடியவில்லை. ஒரு நாள் நெருக்கிக் கேட்டு,
அவளுடைய மேல் முருகை கழற்றி வாங்கிக் கொள்ளுகிறான்.
அவள் வயிறெரிந்து காட்டில் வெள்ளையர் ஆட்சி நடக்கிறதா
அல்லது காவல்காரப் பள்ளன் ஆட்சி நடக்கிறதா, என்று கேட்கிறாள்.
சோளக் காட்டு மூலையிலே
நமது நாட்டிலே
தோத் தேனடா மேல் முருகை
சுங்கக் கேட்டிலே
கம்மங் காட்டு மூலையிலே
நமது நாட்டிலே
காடப் புறா மேயக் கண்டேன்
நமது நாட்டிலே
கொடுத்து விட்டேன் மேல் முருகை
சுங்கக் கேட்டிலே
பாவாடை கட்டிக் கிட்டு
நமது நாட்டிலே
பரங்கிக் கீரை பறிக்கப் போனேன்
சுங்கக் கேட்டிலே
பள்ளப்பயல் விசுவாசமா
நமது நாட்டிலே
பரங்கிப்பய விசுவாசமா
சுங்கக் கேட்டிலே
சிறு கீரை விசுவாசமா
நமது நாட்டிலே
சீமைப்பயல் விசுவாசமா
சுங்கக் கேட்டிலே
வட்டார வழக்கு:
விசுவாசம்-ஆட்சிக்கு அடங்குவது.
குறிப்பு: வெள்ளையர்
ஆட்சிக் காலத்தில் இப்பாடல் எழுந்திருக்க வேண்டும்.
உதவியவர்:
பெ. இராமநாதன்
சேகரித்தவர்:
கு.சின்னப்ப பாரதி |
இடம்:
போத்தனூர். |
|