ஏற்றப் பாட்டு
ஆற்றுப் பாசனம் இல்லாத இடங்களில் தமிழ் மன்னர்களும், நாயக்க
மன்னர்களும், குளங்களும், ஏரிகளும், கண்மாய்களும் வெட்டிப் பாசன வசதிகளை அபிவிருத்தி செய்தார்கள்.
அரசர்கள் போரில் வெற்றி பெற்றபொழுது வெற்றித் தூண்கள் நாட்டியது போலவே நீர் நிலைகளையும்
வெட்டினார்கள். தென் பாண்டி நாட்டில் வாகைக்குளம் என்ற பெயருடைய ஏரி ஒன்று இருப்பதே
சான்றாகும். நாயக்க மன்னர்கள், தாங்கள் வெட்டிய நீர் நிலைகளுக்குச் சமுத்திரம் என்று
பெயர் வைத்தார்கள். அரசரது பெயர்களையும், தளவாய்களது பெயர்களையும் நினைவுறுத்தும் ஏரிகள்
பல உள்ளன. உதாரணமாக விசுவநாதப் பேரேரி, வடமலை சமுத்திரம், கோபால சமுத்திரம் முதலியன.
வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் புதிய ஏரிகள் எவையும் தோண்டப்
பெறவில்லை. பெரும்பாலான பழைய ஏரிகள் அடிக்கடி பழுது பார்க்கப்படவில்லை. அதனால் அவை
மேடிட்டுப் போதுமான அளவு நீர்த் தேக்கி வைக்க வசதியற்றவை ஆயின. அவற்றிலிருந்து தண்ணீர்
பாய்ந்தும் அந்த நிலங்களுக்குப் போதுமான நீர் கிடைக்காமல் போயிற்று. ஏரிகளில் நீர்
நிரம்பினாலும், நாற்று வளர்ந்து, பொதி தள்ளி, மணி பிடிக்கும் தறுவாயில் ஏரி வற்றிப்
போகும்.
|