|
தேயிலைத் தோட்டம்
தேயிலைத் தோட்டம் ஓர் இளைஞன் களை வெட்டிக் கொண்டிருக்கிறான்.
அவனுடைய காதலி கூடையெடுத்துக் கொண்டு கொழுந்து எடுக்கப் போகிறாள். இருவரும் வேலை செய்யுமிடம்
பக்கத்தில் இல்லை. அவள் மேல் முனைக் காட்டுக்குச் செல்ல வேண்டும். அவனுக்கு மலைச்
சாரலில் தான் வேலை. அரிசிக் கடைக்குப் போகிற சாக்கில் இருவரும் சேர்ந்து செல்லலாமா?
என்று கேட்கிறாள்.
கூட மேலே கூட வைச்சு
கொழுந் தெடுக்கப் போற புள்ளே
கூடய இறக்கி வச்சு
குளிர்ந்த வார்த்தை சொல்லிப் போயேன்
ஏலமலைக்குப் போறேன்
ஏலப்பசுங் கிளியே
ஏலப்பூ வாடையிலே
என்னை மறந்திராதே
ஏத்தமடி கல்மருத
இறக்கமடி மீனாக்கொல்லை
தூரமில்ல அரிசிச்சாப்பு
துயந்து வாடி நடந்து போவோம்
கண்டியும் கண்டேன்
கல்மருத தோட்டம் கண்டேன்
தூரமில்ல அரிசிச்சாபு
துயந்து வாடி நடந்து போவோம்
வட்டார வழக்கு:
கூடய-கூடையை; கல்மருத-கல்மருதத் தோட்டம்;
ஏத்தம்-ஏற்றம், உயரம்;
மீனாக்கொல்லை-தோட்டத்தின் பெயர்;
அரிசிச்சாப்பு-அரிசிக்கடை; துயந்து-தொடர்ந்து.
|
சேகரித்தவர்:
S.M.கார்க்கி |
இடம்:
சிவகிரி,
நெல்லை. |
|