|
உப்பளம்
தமிழ்நாடு நீண்ட கடற்கரையை உடையது. இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து கடற்கரையில்
வாழ்ந்துவரும் மக்கள் கடல் நீரிலிருந்து உப்புக்காய்ச்சி வருகிறார்கள். பெரும்பாணாற்றுப்
படையில் உப்புக்காய்ச்சும் தொழில் செய்யும் மக்கள் உமணர் என்றும், அவரது பெண் மக்கள்
உமட்டியர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். உப்புக் காய்ச்சும் தொழில் தமிழ் நாட்டு
புராதனத் தொழில்களில் ஒன்று.
இத் தொழில் மிகவும் கடினமானது. அளத்தில் நீரில்
உறைந்திருக்கும் உப்பு காலைக்கீறி வேதனையை உண்டாக்கும். கால்களில் புண்கள் தோன்றும்.
பழக்கமில்லாதவர்கள் வேலைக்கு வந்தால் மிகவும் துன்பப்படுவார்கள்.
தூத்துக்குடி அருகிலுள்ள
உப்பளங்களுக்குப் பஞ்ச காலத்தில் கோயில் பட்டி தாலுக்காவிலுள்ள விவசாயத் தொழிலாளர்கள்
ஏராளமாக வேலைக்கு வருவார்கள். வேலை செய்யத் தெரியாமல் அவர்கள் திண்டாடும் பொழுது வேலையில்
பழக்கமுள்ள பெண்கள் அவர்களைக் கேலி செய்வார்கள். ‘கரண்டையளவு தண்ணீர் கழுத்தளவு தண்ணீராக
இருக்கிறதா?’ என்று பெண்கள் கேட்பார்கள். புதிதாக வந்த இளைஞர்கள் கோபித்துக்
கொள்ள மாட்டார்கள். பாட்டும் சிரிப்பும் கலந்து வேலையைத் தடைபடுத்தும். அப்பொழுது
கங்காணிகள் அதட்டுவார்கள். கங்காணி தலை மறைந்ததும், வேலையின் கடுமையை மறக்க மீண்டும்
பாட்டுப்பாடுவார்கள். இடையிடையே காதல் அரும்பும். கடுமையான வேலையும், கொடூரமான
சுரண்டலும்,மனிதப் பண்பை மாய்த்துவிட முடிவதில்லை.
கட்டாந்தரையிலும் ஒரு சொட்டு மழை
பெய்தாலும் பசும்புல் தலை தூக்குவதில்லையா? அது போல்
பஞ்சம் வாட்ட, அளத்தில் கொத்து வேலை செய்த
போதிலும், இளைஞர்களுக்கிடையே, அன்பும், பரிவும்
துளிர்த்துக் காதலாக
வளருகிறது.
|