|
உப்பளக் காட்சிகள்
உப்பளத்துக்கு முதலாளி வருவதேயில்லை. அபூர்வமாக வரும்போது
வரவேற்புக்கு ஆடம்பர ஏற்பாடுகள் நடைபெறும். வேலை செய்பவர்கள் வெயிலில் காய்ந்து கொண்டு
வேலை செய்வார்கள். ஓய்வு நேரத்தில் கூட ஒதுங்குவதற்கு ஒரு கொட்டகை இல்லை. எஜமான்
வருகிறாரென்று தெரிந்ததும் கொட்டகை போடுகிறார்கள். அவர் ஒரு மணி நேரத்துக்கு மேல்
தங்கமாட்டார். இதைப் பார்த்த தொழிலாளி பாடுகிறான்.
வட்டடோ உடையான்
சிங்காரமாம்
வரிஞ்சு
கட்டும் உப்பளமாம்
சாமிமார் வாரா
வண்ணு
தனிச்சு
அடிங்க கொட்டகைய
ஒருநாள் இளைஞன் ஒருவன் நல்ல துணியில்
சட்டை தைத்துப் போட்டுக் கொண்டு உப்பளத்துக்கு வருகிறான். உப்புப் பெட்டியைத் தலையில் தூக்கி குவியலில் கொண்டு
வந்து கொட்ட வேண்டும். அந்த வேலைதான் அவனுக்கு. அப்பொழுது சேறும் நீரும் பெட்டியிலிருந்து
வழியும். ஆகவே எந்தச் சட்டை போட்டுக்கொண்டு அளத்துக்கு வந்தாலும், சட்டையை கழற்றி
வைத்து விட்டுத்தான் அவன் வேலை செய்ய முடியும். அவனைக் காதலிக்கும் பெண்ணும் அவ்வளத்தில்
வேலை செய்கிறாள். அவனைப் பார்த்ததும் சிரித்துக் கொண்டே அவள் பாடுகிறாள்.
சட்டை மேல் சட்டைபோட்டு
சரிகைச் சட்டை மேலே போட்டு
எந்தச் சட்டை போட்டாலும்
எடுக்கணுமே உப்புப் பெட்டி
அவன் சிரித்துக்கொண்டே சட்டையைக் கழற்றிவிட்டு, அவளைப்
பார்க்கிறான். அவள் புதிய காது நகையொன்று அணிந்திருக்கிறாள். காசு மிச்சப்படுத்தி
அவளாகவே வாங்கிய நகை. அதைப் பாராட்டி அவன் பாடுகிறான்.
போன நல்ல வருஷத்திலே
புதுக் குணுக்கு போட்டபிள்ளா
இந்த நல்லா வருஷத்திலே
ஏத்திட்டாளே வைரக்கம்மல்
சில உப்பளங்களில் கங்காணிகளின் தடபுடல் அதிகமுண்டு. அவனிடம்
நிரம்பக் காசு பணம் இருக்கும். அதிகாரம், உருட்டல், மிரட்டல், டம்பம் இவை யாவையும்
அவன் அபப்ாவித் தொழிலாளிகளிடம் காட்டுவான். ஆனால் அவன்
உழைத்துப் பிழைக்கவில்லை.
உழைப்பவர்களைப் பிடித்து வந்தால் உப்பள முதலாளி அவனுக்கு காசு கொடுப்பான். இதை உணர்ந்த
தொழிலாளி மற்றவர்களுக்குக் கூறுகிறான்.
கங்காணி கங்காணி
கருத்தச் சட்டை கங்காணி
நாலு ஆளு வரலேன்னா
நக்கிப் போவான் கங்காணி
வட்டார வழக்கு:
குணுக்கு-உருண்டையாகத் தெரியும் காதணி
;
வைரக்கம்மல்-உண்மையில்
வைரமல்ல.
|
சேகரித்தவர்
:
M.P.M.
ராஜவேலு |
இடம்:
தூத்துக்குடி வட்டம். |
|