ஒப்பாரி
கூட்டார்க்குச் சம்மதமோ?

சிறப்பாக வாழ்ந்த குடும்பத்தின் தலைவன் மாய்ந்து போனான். மனைவியைச் சிறுசிறு குழந்தைகளோடு விட்டு அவன் இறந்து போனான். அவள் வாழ்நாள் மட்டும், தான் சீரும் சிறப்புமாக வாழப் போவதாக எண்ணியிருந்தாள். புராதன நகரமான மதுரை நெடுநாட்கள் புகழோங்கி நிலைத்திருப்பது போலத் தன் குடும்பமும் நிலைக்குமென்று கனவு கண்டாள். ஆனால் திடீதென்று கணவன் மாண்டான். தந்தையும், சிற்றப்பன்மாரும் வந்தனர் ; அவர்களிடம் துயரத்தைச் சொல்லிக் கதறி அழுகிறாள் அவள்.

சீமை அழியுதுண்ணு நான்
சிந்தையிலும் எண்ணலியே ;
சீமை அழியலியே-என்
சிறப்பழிஞ்ச மாயமென்ன?
மருத அழியுதுண்ணு நான்
மனசிலேயும் எண்ணலியே !
மருத அழியலியே-என்
மதிப்பழிஞ்ச மாயமென்ன?
கடுகு சிறுதாலி
கல் பதிச்ச அட்டியலாம்
கல்பதிச்ச அட்டியலை-நான்
கழட்டி வைக்க நாளாச்சே
மிளகு சிறுதாலி
முகப்பு வைத்த அட்டியலு
முகப்பு வைச்ச அட்டியலை-நான்
முடிஞ்சு வக்க நாளாச்சே
பட்டு கழட்டி வச்சேன்
பாதம் வரை வெள்ளையிட்டேன்
சிகப்பு கழட்டி வச்சேன்-என்
தேகமெல்லாம் வெள்ளையிட்டேன்
ஆத்துல புல்லறுத்து
அறுகம்புல்லு பந்தலிட்டு
அரும மக தாலி வாங்க-ஒங்க
ஐவருக்கும் சம்மதமோ
குளத்துல புல்லறுத்து
கோரம்பா பந்தலிட்டு
குழந்தை மக தாலி வாங்க-ஒங்க
கூட்டார்க்கும் சம்மதமோ?

வட்டார வழக்கு: மருத-மதுரை ; வச்ச-வைத்த.

குறிப்பு: தனது தகப்பனையும், சிற்றப்பன்மாரையும் பஞ்ச பாண்டவர்களுக்கு ஒப்பிடுகிறார்கள். தவிர நாயக்க மன்னரை வெகுகாலம் எதிர்த்த பஞ்ச பாண்டியர்கள் என்ற குறு நில மன்னர்களை மறவர்கள் தங்களது முன்னோரெனக் கருதுகின்றனர், எனவே ‘ஐவர்’ என்றாள்.

சேகரித்தவர் :
S.M. கார்க்கி

இடம் :
சிவகிரி,நெல்லை.