|
பஞ்சையானேன்
முத்து மழை பேயும்
மொத வாய்க்கால் தண்ணி வரும்
மொத வாய்க்காத் தண்ணிக்குத்தான்
மொளவு சம்பா நெல் விளையும்
மொளவு சம்பா நெல்லுக்குத்தா
மொதலாளியா நானிருந்தேன்
எனக்கு வந்த சாமி சின்ன நடையிழந்து
சிறு நாடு காலம் போவ
மொளவு சம்பா நெல்லுக்கு
மொற மெடுக்கப் பஞ்சையானேன்
கனத்த மழை பேயும்
கனிவாய்க் காத்தண்ணி வரும்
கனிவாய்க் காதண்ணிக்குத்தா
கடுகு சம்பா நெல் விளையும்
கடுகு சம்பா நெல்லுக்குத்தான்
கணக்காளியா நானிருந்தேன்
கணக்கரு காலம் போக
கடுகு சம்பா நெல்லுக்கு
களங் கூட்டப் பஞ்சையானேன்
வட்டார வழக்கு
:
மொளவு-மிளகு
;
மொறம்-முறம்
; கணக்காளி-சொந்தக்காரி.
குறிப்பு
:
விதவையின்
நிலை கண்டு அண்ணன் தம்பி, அக்கா தங்கையர் யாரும் இரங்கவில்லை. அவளைக் காண
வருவதில்லை. அவளைத் தங்கள் வீடுகளுக்கு அழைப்பதுமில்லை. கணவன் வாழ்ந்தபோது அடிக்கடி
விருந்தாளி வந்த சுற்றத்தார், அவனிறந்ததும் வருவதை நிறுத்தி விட்டனர். அவனா அவர்களுக்கு
உறவு? உறவை ஏற்படுத்துவதும் செல்வம்தானே? கணவனோடு அவளுக்குச் செல்வம் போயிற்றல்லவா?
அதை நினைத்து மனமுருகிப் பாடுகிறாள் விதவை.
|
உதவியவர்
:
நல்லம்மாள்
சேகரித்தவர்:
கு. சின்னப்ப பாரதி |
இடம்:
சேலம் மாவட்டம். |
|